Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Paṭṭiṉattu Piḷḷaiyār · Supplement to Tirukkazhumala Mummaṇikkōvai
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெரும
கருணை முதுவெள்ளம் பெருகு திருநயன
கைவலம் நெல்லியங் கனியது போலச்
சைவசித் தாந்தத் தெய்வ ஆகமத்தை
வரன்முறை பகர்ந்த திருமலர் வாய
பவளவரை மீதில் தவளமின் என்னச்
செப்பரு மார்பணி முப்புரி நூல
பேரிகல் ஆணவக் காரிரு ளினுக்கும்
பின்றொடர் வல்வினை வன்றொட ரினுக்கும்
மாயைமா மாயை ஆயபே யினுக்கும்
அஞ்சல்என் றமைத்த கஞ்சமென் கரதல
அருமறைச் சிரத்தும் பெருமைமெய் அன்பர்
துங்க இதயத்தும் தங்கு பொற்பாத
துன்னிய பயோதரம் மின்னினம் மிடைதலின்
அளப்பரும் பெருமை வளத்தினை விளைத்தலின்
சந்திர திலகம் சிந்துரம் மருவலின்
உறுகண் டீரவந் துறுமுழை உறுதலின்
சாதமுறை சுழீஇச் சோதிமீ தமர்தலின்
பணைஎழு மரவம் பிணையொடு மேவலின்
காமரஞ் செவ்வழி காமரின் எய்தலின்
அளகை எதிரெனும் ஆசையுற் றுறைதலி
னாடக மருவி நீடறை பெறுதலின்
நாட்டியத் தோகை ஈட்டமங் கணைதலின்
அகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின்
மலையா சலமென நிலைசேர் மாட
மாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசை
நேமிமால் வரைஎனப் பூமிமீ திலங்கும்
காழிமா நகரத் தூழிதோ றமர்ந்த
அமையா அன்பின் உமையாள் கொழுந
தெரியநான் முகன்பணி பெரியநா யகநின்
பொன்மலர்ப் பாதம் சென்னிவைத் திறைஞ்சுதும்
மேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள்
பரம்பரை தவறா வரம்பெறு குரவன்
மருளற இரங்கி அருளிய குறிஎனும்
நிந்தையில் கனக மந்தரம் நிறுவி
மாண்அறிவென்னும் தூணிடைப் பிணித்த
நேசம் என்னும் வாசுகி கொளுவி
மதித்தல் என்னும் மதித்தலை உஞற்றிய
பேரா இன்பச் சீர்ஆ னந்தம்
பெறலரும் அமுதம் திறனொடும் பெற்று
ஞானவாய் கொண்டு மோனமாய் உண்டு
பிறப்பிறப் பென்னும் மறப்பெரும் பயத்தால்
பன்னாட் பட்ட இன்னாங் ககற்றி
என்னையும் தன்னையும் மறந்திட்
டின்ப மேலீ டெய்துதற் பொருட்டே. ......(45)
2
Keep
பொருளாசை பெண்ணாசை பூவாசை என்னும்
மருள்ஆசை யாமாசை மாற்றித் - தெருள்ஞான
வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நல்நெஞ்சே
பூந்தராய் நாதரைநீ போற்று.
3
Keep
போற்றும் பழமறை வாசிப் புனிதர் புகலிவெற்பன்
ஆற்றும் தவத்தினைக் கண்டே நகைத்த தணிகொள்முல்லை
தூற்றும் புயல்வட காற்றோ அடிக்கத் தொடங்குமதிக்
கீற்றிங் கெனது மனங்குழம் பாகக் கிடைத்ததின்றே.
4
Keep
இன்றென உளதென அன்றென ஆமென
உரைதரு நூலையும் பொருளையும் தனித்தனி
பல்வித மாகச் சொல்வகைச் சமய
மாகிய பயம்பில் போகுதல் குறித்த
நிலையில் துறைபல நிலையுள துறைசில
பொருந்திடும் உலகப் பெருங்கட லிடத்தின்
மயிர்நூல் கிடத்திப் பயில்வுறு தோலெனும்
வன்புறு பலகையின் என்பெனும் ஆணியின்
நரம்பெனப் பெயரிய உரம்பெறு கயிற்றின்
வெரிந்உறும் என்பெனும் பரிய கூம்பின்
ஐம்பொறி யாகிய மொய்ம்புறு வாய்தலின்
காயமென அமைத்த மாயநா வாயில்
இருவினை என்ன வருசரக் கேற்றிக்
காமம் உலோபம் ஏமமா மோகம்
மிதமறு குரோதம் மதமாற் சரியமென்
றுரைபெறு யவனர் நிரையுற இருத்தி
நெடுநீர் என்னப் படுநெடு நாணில்
தங்கிய மடிஎனும் நங்குரஞ் சேர்த்தி
அற்றமில் மனம்எனப் பெற்றபாய் விரித்துத்
தடைபடா ஆசைக் கடுவளி துரப்பத்
தானம் ஆதி யான தீவுகளிற்
செல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லி
இவ்வா றியங்கும் அவ்வா றதனுள்
முன்பார் கால வன்பார் தாக்கத்
தொக்குறு மரக்கலம் பக்குவிட் டம்ம .
அக்கடல் நீருள் புக்கறி வழியுழி
மறலி என்னும் சுறவுபிடித் தீர்ப்பக்
கடுநர கென்னும் படுகுழி அழுந்தி
உளதுய ரினுக்கோர் அளவிலை அதனால்
இம்முறை இயங்குதல் செம்மை அன்றென்று
முற்றுணர் பெரியோய் அற்றமில் வலியோய்
ஓதா துணர்ந்த நாதா தீத
அருவுரு என்னும் பொருள்முழு துடையோய்
யாவரும் நின்வய மேவரப் புரிவோய்
கரையறும் இன்பப் புரைதவிர் நிமல
சாந்தணி வனமுலை ஏந்திழை பாக
ஞானமா மணநிறை மோனமா மலரே
வித்தகம் பழுத்த முத்திவான் கனியே
பரைமுதல் ஐம்பணை நிரைபெறக் கிளைத்த
திருத்தகு நீழல் அருட்பெருந் தருவே
பத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்த
பசும்பொனிற் செய்த தசும்பு பலதொக்க
தோற்றம் போல வீற்றுவீற் றமைந்த
தீங்கனி பணைதொறும் தாங்குமா தளையும்
வித்துரு மத்திணை ஒத்தசெந் தளிரும்
ஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும்
மேலிடு வண்டெனும் நீலமா மணியும்
மரகதம் என்ன விரவுகாய்த் திரளும்
மறுவில்மா மணிஎனும் நறியசெங் கனியும்
கிடைத்தசீர் வணிகரில் படைத்தமாந் தருவும்
எண்டிசை சூழ்ந்து விண்தொடும் புகலி
மேவிய பெரும ஆவி நாயகனே
கணபணக் கச்சைப் பணஅர வசைத்த
மட்டலர் புழுகணி சட்டை நாயகன்
என்னும் மீகாமன் மன்னினன் புரப்பநீ
வீற்றினி திருக்க ஏற்றமெய்ப் பிரணவத்
தோணியே பற்றெனத் துணிந்து
காணுறும் அறிவொடு கண்டு கொண்டேனே.
5
Keep
கண்டேன் புகலிக் கருத்தனைத்தன் மெய்ஞ்ஞான
வண்டேனுண் டேமகிழும் வண்டானேன் - பண்டே
அளியனுமா னேன்மனமெய் யார்பதம்வே றின்றிக்
குளிர்சிவா னந்தமிலங் கும்.
6
Keep
கும்பிட்ட பத்தர்க் கழியாத இன்பம் கொடுக்குமுத்தர்
வம்பிட்ட கொங்கை உமைபாகர் சண்பையர் வந்திலரேல்
கொம்பிட்ட கோழிக் கொடிவேந்தன் கொச்சையைக் கொல்வதனால்
அம்பிட்ட கட்சிற் றிடைச்சிக்கென் னோபயன் ஆகுவதே.
7
Keep
ஆகுவா கனனைத் தோகைவா கனனை
உற்றசீர் மகார்எனப் பெற்றசுந் தரனே
ஞானவா ரிதியில் ஆனஆ ரமுதே
கற்றவர் கருதும் நற்றவக் கரும்பே
இருட்குறும் பெறிந்த அருட்கலா மதியே
கதிர்த்தொகை குன்றா துதித்த செங்கதிரே
நிறைந்தஅன் பலரின் உறைந்த செந்தேனே
துன்பமொன் றறியா இன்பவா ரிதியே
மறைமுடி விளக்கும் சுடர்விடு மணியே
விறலரி பிரமன் பெறலரும் பொருளே
சிற்பநூல் முழுதும் அற்பமின் றுணர்ந்த
ஓவியர் அற்புத மேவுகைத் தொழிலர்
சுத்தவெண் படிகப் பித்திகைத் தலத்தின்
நவமணி தெளித்துக் குவவின கூர்நுதித்
தூரியங் கொண்டு சீரிதிற் குயிற்றும்
இமைப்பிலா நாட்டத் தமைப்பருங் கலாப
நீலமே காரமும் கோலமார் குயிலும்
துப்பமர் வளைவாய் ஒப்பறு பச்சைத்
தகைசிறைக் கிளியும் புகைநிறப் புறவும்
மேல்நிமிர் தூவிப் பால்நிற அனமும்
நன்மது நிகர்த்த இன்மொழிப் பூவையும்
இனமெனக் கருதி மனமுவந் தணைத்த
உயிர்நிலை பெற்ற மயில்முதற் பறவையும்
கூறுபட நோக்கினர் வேறுபா டறியா
வளனொடு செறிந்த அளவிலா மாடத்
துறைதரு கற்பு நிறைகுல மடவார்
அளிமுரல் குழலும் ஒளிகிளர் முகமும்
குலாவிய புருவமும் நிலாவிரி குழையும்
நறியமென் சொல்லுஞ் சிறிய நுண்ணிடையும்
தத்துநீர் உவரி முத்தமா லிகையும்
பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்
திருநகர் இதுவெனக் கருதிவான் முகிலும்
சந்திர விம்பமும் இந்திர தனுவும்
இலங்குசெங் கதிரும் துலங்குவா னமுதும்
வாரா மின்னும் தாரா கணமும்
ஒருங்குவந் திருந்த பெருந்திறன் ஏய்ப்பக்
காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த
காழிநா யகனே வாழிபூ ரணனே
ஏர்தரும் பொற்கிரி சேர்கருங் கொடியும்
பொன்னிற மாமெனச் சொன்னதொல் மொழியும்
ஏதமில் நிறைமதிச் சீதள நிலவால்
ஆரும்மெய் உருப்பம் தீரும் என்பதுவும்
மொழிதரும் இரத குளிகைதற் சேர்ந்த
காளிமச் சீருண நீள்இயற் கனக
மாமெனக் கூறும் தோமறு மொழியும்
கருட தியானம் மருள்தப வந்தோர்
நோக்கினில் தவிரும் தீக்கடு என்றலும்
ஆயிரங் கிரணத் தலர்கதிர் முன்னம்
பாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழியும்
அங்கண்மா ஞாலத் தெங்கணும் ஒப்ப
இயலும் பட்டாங் கயல்அல என்னல்
சரதமெய்ஞ் ஞான வரதநிற் சேர்ந்த
பேதையேன் பாசத் தீவினை அகற்றித்
திருவருட் செல்வம் பெருகுமா றுதவி
அளித்தருள் பேரின் பாகும்
களித்திடும் முத்திக் காழிவான் கனியே.
8
Keep
காழிக்கு வேந்தர் கருணா லயர்முனம்நீ
காழிக் குமாரன் கவிகையினை - ஆழிக்கட்
கண்டமட்டில் சூடகமும் கார்விழியிற் கங்கணமும்
கொண்டனள்என் றன்னமே கூறு.
9
Keep
கூறுஞ் செனனக் குடில்நெடு நாள்நுழை கூன்முழுதும்
மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர்கொண்ட
நீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம்
தேறும் பொருள்என் றுணராத மாயச் செருக்கினர்க்கே.
10
Keep
செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றி
எம்ம னோரின் இறந்துபிறந் துழலும்
மம்மரிற் பெரிய வானவர் குழுவை
மெய்ப்பொருள் என்று கைப்பொருள் உதவியும்
வழுத்தியும் நெஞ்சத் தழுத்தியும் வறிதே
புறவார் பசும்புற் கறவாக் கற்பசு
வாயிடைச் செருகித் தூயநீர் உதவி
அருஞ்சுவைப் பால்கொளப் பெருஞ்சுரை வருடும்
பேதையர் போலவும் ஓதுநஞ் சமரும்
எட்டியை விரும்பி மட்டுநீர் தேக்கி
ஈநுழை கல்லா மேல்நிமிர் வேலி
உறும்படி அமைத்து நறுங்கனி கொள்ளக்
கருதி முயலுந் திருவிலி போலவும்
இலகுவால் அரிசி உலைபெய எண்ணி
வெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும்
அருநிலம் உழுததின் எருமிகப் பெய்து
வித்திட் டாங்கே விளைபயன் கொள்ளச்
சித்தத் துன்னும் மத்தர் போலவும்
வாழ்நாள் அனைத்தும் வீழ்நா ளாக்கி
இம்மையும் மறுமையும் செம்மையிற் பொருந்தா
திடருறும் மாந்தர் புடவியிற் பலரால்
அன்னவா றெளியனும் உன்னிமதி மயங்கா
தெய்ப்பினில் உதவு மெய்ப்பொரு ளாகி
என்றும்ஓர் இயல்பொடு நின்றகா ரணநின்
சேவடி த் தாமரைப் பூவினைப் புனைந்து
நாத்தழும் பேற ஏத்திஉள் ளுருகிப்
பெருகிய அன்பென வருநீர் நிறைந்த
இதய வாவிப் பதுமமா மலரின்
குணனெனப் பொருந்தும் மணமாம் நின்னைக்
கண்டிறு மாந்து பண்டைவா தனைதீர்ந்
தறைகடல் அழுந்தும் நிறைகுட மதுபோன்
றசைவற் றிருக்க இசையத் தருதி
நிலைமிகப் பொருந்திப் பலமுறை சாரலால்
உந்திய வன்ன உருமரு வுதலான்
மந்திரத் துறுசுடர் மகத்துயர் தலினால்
இதம்பயில் இசைகொள் பதங்கலந் துறலால்
வேதமே ஒப்பென ஓதுகோ புரமும்
ஒழுக்குநெறி சிறிதும் வழுக்கில அதனால்
நூற்பதப் பிரிவினின் மேற்பதம் அதனால்
பலகலை ஒளிர்மதி நிலவிய அதனால்
முத்தரை வியக்கும் பத்திமை அதனால்
சிவாகமம் எனஒளிர் தவாமணி மேடையும்
வெள்ளைவா ரணமேற் கொள்ளுமாங் கதனால்
கட்டா மரைபல மட்டார் தலினால்
அஞ்சுமந் தாரம் விஞ்சிஓங் குதலால்
இந்திரன் எனப்பொலி யந்திர வாவியும்
எங்கணும் நிறைந்த வெங்குரு நாதா
கருவலி தொலைக்கும் பெருமலை மருந்தே
கருணைசூற் கொண்ட பெரியவான் முகிலே
சிற்றிடைக் கருங்கட் பொற்றொடிக் கரத்தாள்
ஆகமார் வனமுலை அணையும்
போகமார் இதழிப் பூங்கண் ணியனே.
11
Keep
கண்ணின் றொளிருங் கருமணியின் உள்ளொளிபோல்
உண்ணின் றொளிரும் ஒளிவிளக்கென் - றெண்ணிப்
புகலிப் பெருமானைப் புண்ணியனைப் போற்றில்
அகலுமே பாசவிருள் அன்று.
12
Keep
இருள்அந் தகன்வரின் ஈர்எயி றேபிறை ஏய்ந்தசெவ்வான்
சுருள்குஞ்சி பாசம் எனஅந்தி வந்தது தோகைசொற்றேன்
பருகும் புகலிப் பிரான்எனும் பானுப் பலகிரணம்
பெருகும் படிவந் துதித்தால் மின்ஆவி பெறுகுவளே.
13
Keep
பெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட்
காயினும் சிறந்த நேயநெஞ் சினனே
யாகக் கழனியின் யோகத் தபோதனர்
ஆனபேர் உழவர் மானமோ டாக்கிய
முயலகன் என்னும் இயல்பெருங் கரும்பை
உதிரம் என்னும் முதிர்சா றொழுக
நகையெனும் முத்தந் தொகையுறத் தோன்றச்
சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்
டரைத்தக வயிரங் கரைத்த வித்தகனே
குங்குமக் கொங்கை அங்கயற் செங்கட்
பெண்ணரசி பிரியா வண்ணமெய்ப் பாக
பாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சி
வெளிய கற்பூரம் களிகொள் கஸ்தூரி
நறுமணம் எவையும் உறுமுறை பொருந்தி
உண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும்
நெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும்
மதிதரு நிலவெனப் புதிய வெண்டயிரும்
வருக்கையின் கனியும் சருக்கரைக் கட்டியும்
முதல்உப கரணம் பதனொடு மரீஇத்
தளவரும் பென்ன வளமலி போனகம்
மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்
நன்னயத் துடன்அருள் அன்னசத் திரமும்
பாடகச் சீறடிப் பான்மொழி மடவார்
நாடகத் தொழில்பயில் நீரடங் கெவையும்
கலைபயில் கழகமும் பலர்பயில் மன்றமும்
உள்ளன கரவா துவந்தெதிர்ந் தளிக்கும்
வள்ளியோர் வாழும் மணிநெடு வீதியும்
பூமகள் உறையு ளாமென விளங்கும்
பெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனே
ஏந்தெழிற் புவன வேந்தன்நீ ஆதலின்
வளமலி நான்முகக் களமருன் ஏவலின்
உரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்ட
மண்டலம் என்னும் கண்டநீள் வயலுள்
சராசரத் தொகுதி விராயவித் திட்டுப்
பாதவ மிருகம் பறவை மானிடர்
ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப
மாவுறை மருமக் காவ லாளர்
வளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின்
புரிபயன் பெறுவான் அரிதர வியற்றி
மெய்வலிக் கூற்றுவக் கைவினை மாக்களிற்
புலாலுடை யாக்கைப் பலாலம தகற்றி
அற்றமில் உயிரெனப் பெற்றநெற் றிரளைப்
பூதசா ரத்தநுப் பூத மகாதநு
பூத பரிணாமம் புகலுறு யாக்கை
மூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப்
பொன்னில நிரயம் இந்நிலம் என்னும்
இடந்தொறும் ஆங்கவை அடங்கவைத் தவற்றுள்
ஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற்
சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்
அரசுகொள் கடமை ஆறிலொன் றென்னும்
புரைதீர் முறைமை புதுக்கினை போலும் அதனால்
மாசுகம் நீயுறும் வண்மை
பேசுக கருணைப் பெரியநா யகனே.
14
Keep
பெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக்
கொருவா தருள்வரம் ஒன்றுண்டே - திருமால்
விடையாய் புகலி விமலா மவுன
விடையாய் பிறியா விடை.
15
Keep
விடையம் பொருளென் றுணராத மார்க்கம் விரும்புமழுப்
படையம் புயக்கரத் தெந்தாதை ஞான பரமஎன்றெண்
சடையம் புனலணி வேணு புரேசன்அந் தாள்மலர்தூ
விடையம் பொருளென் றிருநீஎன் றுண்மை விளம்பினனே.
16
Keep
விளம்புவன் யான்ஒன் றுளம்புகு நெறியால்
எழுத்தின் உறழாது வழுத்துபொருள் இன்றி
குறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லே
ஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி
குழலினு மியாழினும் அழகிதாம் அதுபோல்
நற்றா யாகிஎற் பெற்றாய் என்சொல்
திருச்செவிக் கேறும் பொருத்தமுண் டதனால்
கேட்டி கேட்டி வாட்டமில் பெரியோய்
மதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப்
பற்பல உதவுங் கற்பகத் தருவு
நந்தா வளன்அருட் சிந்தா மணியும்
வாமமாம் மேனிய காம தேனுவும்
அருளிய ஏவல் வரன்முறை கேட்பக்
கடவுளர் அணிமணித் தடமகு டங்கள்
காற்றுணை வருடப் போற்றினர் இறைஞ்சி
முனிவர் ஆசி நனிபல மொழியக்
கரம்பயில் கவரி அரம்பையர் இரட்டக்
கின்னரர் விபஞ்சி நன்னரம் புளரா
இசையமு திருஞ்செவி மிசைஎடுத் தூற்ற
முடங்குளைச் செங்கண் மடங்கல் அணைநாப்பண்
அமுதுகு மென்சொற் குமுதமென் செவ்வாய்
இந்தி ராணி வந்தரு கிருப்பக்
கருமுகில் ஆயிரந் திருமலர் பூத்துச்
செங்கதிர்ச் சேகரம் தங்கவீற் றிருந்த
பெருந்திறன் கடுப்ப இருந்துவிண் புரக்கும்
அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும்
பழமறை கனிந்து மழவுபெற் றிருந்த
செந்நாத் தவிசின் முன்னாள் தங்கிப்
பனுவ லாட்டி இனிதுவந் திருப்ப
வண்டுபாண் முரன்று கிண்டுபு ததைந்து
பொற்றா துண்ணா முற்றா இன்பப்
பிரசமுற் றிருந்த வரசரோ ருகத்தன்
நெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாது
திண்ணிய மனத்திடை எண்ணியாங் கியற்றி
எம்மால் எவையும் இயன்றன என்னச்
செம்மாந் திருக்கும் சிறிய வாழ்க்கையும்
திதலைபூத் தலர்ந்து மதகளி றிகலி
வருமுலை சுமந்த திருமகள் பச்சைப்
பசுந்துழாய் அலங்கல் அசும்புதேன் துளித்துக்
கடிகமழ் மார்பிற் குடிபுகுந் திருப்பத்
தண்ணில வெனவிரி வெண்ணிறப் பாற்கடல்
ஒல்லொலித் தரங்கம் மெல்லடி வருடக்
காமர்தென் கால்எனுஞ் சாமரை அசையத்
துத்திநெய் பரந்து பைத்தபை அகலில்
அணிகிளர் பலகதிர் மணிவிளக் கொளிரச்
சுடிகைவாள் அரவ நெடியபூ அணைமேல்
மறுவிலா நீல வரைகிடந் தென்ன
அறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும்
அழியா இன்பம்என் றொழியா துரைப்பினும்
கற்றவர் கருத்தின் உற்று நோக்குழி
இந்திர சாலம் முந்துநீள் கனவு
வெண்டேர் போல உண்டெனத் தோன்றி
இலவாம் ஆதலின் நலமல ஆங்கவை
நிலைபே றுடையது நின்னருட் செல்வம்
அன்னதே பெறுதற் குன்னினன் தமியேன்
அதனான்
எளிதினின் இரங்கி அளிசுரந் தருளுதி
மரகதத் திடையிடை தரளமிட் டிழைத்த
அரமியம் அதனை விரிகுழை பொதுளி
அரும்பிய புன்னைப் பெரும்பொழில் எனவும்
ஆடக அலங்கல் அணியணி நிறைத்த
சேடுயர் நீல்நிறச் செய்குன் றதனைத்
துணர்த்தபூங் கொன்றை மணத்தகா எனவும்
மொய்க்கும்வண் சிறையளி மைக்கரு நிறங்கள்
பளிங்கரிந் தியற்றிய துளங்கொளி மாடப்
பித்திகைத் தலத்திடைப் பத்திபாய் தலினால்
வந்ததிங் கிரவெனச் சந்தத மடவார்
வார்முலை ஆடவர் மார்பிடைக் குளிப்பப்
புல்லிய கலவிப் புதியதேன் நுகரும்
மல்லலங் காழி வளநகர் வாண
குறிகுணங் கடந்த மறுவில்மா மணியே
உறைபொருள் எங்கணும் நிறைபரி பூரண
அந்த மாதி முந்தையே தவிர்ந்த
அனாதி முத்த என்ஆதி நித்த
அருவுரு வில்லா ஒருபெரும் பொருளே
அளவையின் அடங்கா தொளிர்சுக நேய
உருகுமெய் அன்பர் பருகுமா ரமுதே
நலங்கனி பெரிய நாயகி
கலந்தபே ரின்பிற் களித்தபண் ணவனே.
17
Keep
பணமஞ் சரையிருக்கப் பாவையரைச் சும்மா
புணர்கின்றீர் என்று புகலப் - புணர்வார்க்
கரைக்காசு தந்தனம்என் றார்புகலி யார்மா
வரைக்காசென் றாள்அதற்கு மான்.
18
Keep
மானைக் கலந்த மணவாளன் காழி வரதன்செங்க
ணானைப் புரந்தவன் பத்தர்க்கு முத்தி அளித்தருளும்
ஏனைப் பெரும்பொருள் கல்விமெய்ச் செல்வம் இருந்தளிப்பார்
தேனைத் தருஞ்செழுந் தாமரை நாமகள் செந்திருவே.
Previous
←
Tirukkazhumala Mummaṇikkōvai
Next
Tiruviṭaimarutūr Mummaṇikkōvai
→