Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Nāṉ Ār?
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
Keep
சகல ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவருக்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தையடையத் தன்னைத் தானறிதல்வேண்டும். அதற்கு நானார்? என்னும் ஞானவிசாரமே முக்கிய சாதனம்.
2
Keep
நானார்? ஸப்த தாதுக்களாலாகிய ஸ்தூலதேகம் நானன்று. சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தமென்னும் பஞ்ச விஷயங்களையும் தனித்தனியே அறிகின்ற சுரோத்திரம், துவக்கு, சக்ஷுஸ், ஜிஹ்வை, கிராணமென்கிற ஞானேந்திரியங்களைந்தும் நானன்று. வசனம், கமனம், தானம், மலவிசர்ஜனம், ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்கின்ற வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களைந்தும் நானன்று. சுவாஸாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்சவாயுக்களும் நானன்று. நினைக்கின்ற மனமும் நானன்று. சர்வ விஷயங்களும் சர்வ தொழில்களுமற்று, விஷயவாசனைகளுடன் மாத்திரம் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானன்று. மேற்சொல்லியயாவும் நானல்ல நானல்ல வென்று நேதிசெய்து தனித்துநிற்கும் அறிவே நான். அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்.
3
Keep
சர்வ அறிவிற்கும் சர்வதொழிற்குங் காரணமாகிய மனமடங்கினால் ஜகதிருஷ்டி நீங்கும். கற்பித ஸர்ப்ப ஞானம் போனாலொழிய, அதிஷ்டான ரஜ்ஜு ஞானம் உண்டாகாதது போல, கற்பிதமான ஜகதிருஷ்டி நீங்கினாலொழிய அதிஷ்டான சொரூப தர்சன முண்டாகாது.
4
Keep
மனமென்பது ஆத்மசொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி. அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கின்றது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்ற போது, தனியாய் மனமென்றோர் பொருளில்லை; ஆகையால் நினைவே மனதின் சொரூபம். நினைவுகளைத்தவிர்த்து, ஜகமென்றோர் பொருள் அன்னியமாயில்லை. தூக்கத்தில் நினைவுகளில்லை, ஜகமுமில்லை. ஜாக்ர சொப்பனங்களில் நினைவுகளுள, ஜகமும் உண்டு. சிலந்திப்பூச்சி எப்படித் தன்னிடமிருந்து வெளியில் நூலை நூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக்கொள்ளுகிறதோ, அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து ஜகத்தைத் தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக்கொள்ளுகிறது. மனம் ஆத்மசொரூபத்தினின்று வெளிப்படும்போது ஜகம் தோன்றும்; ஆகையால் ஜகம் தோன்றும்போது சொரூபம் தோன்றாது. சொரூபம் தோன்றும் (பிரகாசிக்கும்) போது ஜகம் தோன்றாது. மனதின் சொரூபத்தை விசாரித்துக்கொண்டேபோனால் “தானே” மனமாய் முடியும். தானென்பது ஆத்ம சொரூபமே. மனம் எப்போதும் ஒரு ஸ்தூலத்தையனுசரித்தே நிற்கும்; தனியாய் நில்லாது. மனமே சூக்ஷ்ம சரீர மென்றும் ஜீவனென்றும் சொல்லப்படுகிறது.
5
Keep
இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவதெதுவோ அஃதே மனமாம். நானென்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்தவிடத்திற் றோன்றுகின்றதென்று விசாரித்தால், ஹ்ருதயத்திலென்று தெரியவரும். அதுவே மனதின் பிறப்பிடம். நான், நான் என்று கருதிக்கொண்டிருந்தாலுங்கூட அவ்விடத்திற் கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகளெல்லாவற்றிற்கும் நானென்னும் நினைவே முதல்நினைவு. இது எழுந்தபிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றியபிறகே முன்னிலை படர்க்கைகள் தோன்றுகின்றன. தன்மையின்றி முன்னிலை படர்க்கைகளிரா.
6
Keep
நானாரென்னும் விசாரணையினாலேயே மனமடங்கும். நானாரென்னும் நினைவு மற்ற நினைவுகளை யெல்லாமழித்துப் பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானுமழியும். பிற வெண்ணங்களெழுந்தாலவற்றைப் பூர்த்திபண்ணுவதற்கு எத்தனியாமல் அவை யாருக்குண்டாயின? என்று விசாரிக்கவேண்டும். எத்தனை எண்ணங்களெழினுமென்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வோரெண்ணமும் கிளம்பும்போதே, இது யாருக்குண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கென்று தோன்றும். நானார்? என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பிவிடும். எழுந்தவெண்ணமு மடங்கிவிடும். இப்படிப் பழகப் பழக மனதிற்குத் தன் பிறப்பிடத்திற் றங்கிநிற்கும் சக்தி யதிகரிக்கின்றது. சூக்ஷ்மமான மனம், மூளை இந்திரியங்கள் வாயிலாய் வெளிப்படும்போது ஸ்தூலமான நாம ரூபங்கள் தோன்றுகின்றன. ஹ்ருதயத்தில் தங்கும்போது நாமரூபங்கள் மறைகின்றன. மனத்தை வெளிவிடாமல் ஹ்ருதயத்தில் வைத்துக்கொண்டிருப்பதற்குத்தான் அகமுகம் அல்லது அந்தர்முகம் என்று பெயர். ஹ்ருதயத்திலிருந்து வெளிவிடுவதற்குத்தான் பகிர்முகமென்று பெயர்.
7
Keep
இவ்விதமாக மனம் ஹ்ருதயத்திற்றங்கவே, எல்லா நினைவுகளுக்கும் மூலமான நான் என்பது போய் எப்பொழுது முள்ள தான் மாத்திரம் விளங்கும். நான் என்னும் நினைவு கிஞ்சித்துமில்லாவிடமே சொரூபமாகும். அதுவே மௌனமெனப்படும். இவ்வாறு சும்மாவிருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டியென்று பெயர். சும்மாவிருப்பதாவது மனத்தை ஆன்மசொரூபத்தில் லயிக்கச்செய்வதே. அன்றி, பிறர்கருத்தறிதல், முக்கால முணர்தல், தூரதேசத்தில் நடப்பனவறிதல் ஆகிய இவை ஞானதிருஷ்டியாகமாட்டா.
8
Keep
யதார்த்தமாயுள்ளது ஆத்மசொரூப மொன்றே. ஜக, ஜீவ, ஈச்வரர்கள் “சிப்பியில் வெள்ளி” போலநிற் கற்பனைகள். இவை மூன்றும் ஏககாலத்திற் றோன்றி ஏககாலத்தில் மறைகின்றன. சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈச்வரன், எல்லாம் சிவ சொரூபமாம்.
9
Keep
மனமடங்குவதற்கு விசாரணையைத்தவிர வேறு தகுந்த உபாயங்களில்லை. மற்ற உபாயங்களினாலடக்கினால், மனமடங்கினாற்போலிருந்து மறுபடியும் கிளம்பிவிடும். பிராணாயாமத்தாலும் மனமடங்கும். ஆனால் பிராணனடங்கியிருக்கும் வரையில், மனமுமடங்கியிருந்து பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு வாசனை வயத்தாயலையும். மனத்திற்கும் பிராணனுக்கும் பிறப்பிடமொன்றே. நினைவே மனத்தின்சொரூபம், நானென்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு; அதுவே யகங்காரம். அகங்கார மெங்கிருந்து உற்பத்தியோ, அங்கிருந்துதான் மூச்சும் கிளம்புகின்றது. ஆகையால் மனமடங்கும்போது பிராணனும், பிராணனடங்கும்போது மனமுமடங்கும். பிராணன் மனத்தின் ஸ்தூலரூபமெனப்படும். மரணகாலம் வரையில் மனம் பிராணனை உடலில் வைத்துக்கொண்டிருந்து, உடல் மரிக்குங்காலத்தில் அதனைக்கவர்ந்துகொண்டு போகின்றது. ஆகையால் பிராணாயாமம் மனத்தை யடக்க சகாயமாகுமேயன்றி மனோநாசஞ்செய்யாது.
10
Keep
பிராணாயாமம் போலவே மூர்த்தி தியானம், மந்திர ஜபம், ஆகாரநியமமென்பவைகளும் மனத்தையடக்குஞ் சகாயங்களே. மூர்த்தி தியானத்தாலும், மந்திர ஜபத்தாலும் மனம் ஏகாக்கிரத்தையடைகிறது. சதா சலித்துக்கொண்டிருக்கும் யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக்கொடுத்தால் அவ் யானை எப்படி வேறொன்றையும் பற்றாம லதையே பற்றிக்கொண்டு செல்லுமோ, அப்படியே சதா சலித்துக்கொண்டிருக்கும் மனமும், அதனை ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்திற் பழக்கினால் அதையே பற்றிக்கொண்டிருக்கும். மனமளவிறந்த நினைவுகளாய் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுக ளடங்கவடங்க ஏகாக்கிரத்தன்மையடைந்து, அதனால் பலத்தை யடைந்த மனத்திற்கு ஆத்மவிசாரம் சுலபமாய் சித்திக்கும். எல்லா நியமங்களிலுஞ் சிறந்த மித ஸாத்விக ஆகார நியமத்தால் மனத்தின் ஸத்வகுணம் விருத்தியாகி, ஆத்மவிசாரத்திற்கு சகாயமுண்டாகிறது.
11
Keep
தொன்றுதொட்டு வருகின்ற விஷயவாசனைகள் அளவற்றனவாய்க் கடலலைகள்போற் றோன்றினு மவையாவும் சொரூபத்யானம் கிளம்பக் கிளம்ப அழிந்துவிடும். அத்தனை வாசனைகளுமொடுங்கி, சொரூபமாத்திரமாயிருக்க முடியுமா வென்னும் சந்தேகநினைவுக்கு மிடங்கொடாமல், சொரூபத்யானத்தை விடாப்பிடியாய்ப் பிடிக்கவேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியாயிருந்தாலும், நான் பாபியாயிருக்கிறேனே எப்படிக் கடைத்தேறப் போகிறேனென்றேங்கி யழுதுகொண்டிராமல் தான் பாபி என்னு மெண்ணத்தையு மறவே யொழித்து சொரூபத்யானத்தி லூக்க முள்ளவனாக விருந்தால் அவன் நிச்சயமாய் உருப்படுவான்.
12
Keep
மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நானாரென்னும் விசாரணையும் வேண்டும். நினைவுகள் தோன்றத் தோன்ற அப்போதைக்கப்போதே அவைகளையெல்லாம் உற்பத்திஸ்தானத்திலேயே விசாரணையால் நசிப்பிக்கவேண்டும். அன்னியத்தை நாடாதிருத்தல் வைராக்கியம் அல்லது நிராசை. தன்னை விடாதிருத்தல் ஞானம். உண்மையி லிரண்டு மொன்றே. முத்துக்குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக்கொண்டு மூழ்கிக் கடலடியிற் கிடக்கும் முத்தை எப்படி யெடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள்ளாழ்ந்து மூழ்கி ஆத்மமுத்தை யடையலாம். ஒருவன் தான் சொரூபத்தை யடையும் வரையில், நிரந்தர சொரூப ஸ்மரணையைக் கைப்பற்றுவானாயின் அதுவொன்றே போதும். கோட்டைக்குள் எதிரிகளுள்ளவரையில் அதிலிருந்து வெளியே வந்துகொண்டேயிருப்பார்கள். வர வர அவர்களையெல்லாம் வெட்டிக்கொண்டேயிருந்தால் கோட்டை கைவசப்படும்.
13
Keep
கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலிவாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவினருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி யொருக்காலும் கைவிடப்படார். எனினும் குரு காட்டிய வழிப்படி தவறாது நடக்கவேண்டும்.
14
Keep
ஆன்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்று மிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக்களிப்பதாம். ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வரசக்தி நடத்திக்கொண்டிருக்கிறபடியால், நாமுமதற் கடங்கியிராமல், இப்படிச் செய்யவேண்டும் அப்படிச் செய்யவேண்டுமென்று ஸதா சிந்திப்பதேன்? புகைவண்டி சகல பாரங்களையும் தாங்கிக் கொண்டுபோவது தெரிந்திருந்தும், அதிலேறிக்கொண்டுபோகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையு மதிற் போட்டுவிட்டு சுகமாயிராமல் அதை நமது தலையிற்றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்படவேண்டும்?
15
Keep
சுகமென்பது ஆத்மாவின் சொரூபமே. சுகமும் ஆத்மசொரூபமும் வேறன்று. ஆத்மசுகம் ஒன்றேயுள்ளது. அதுவே ஸத்யம். ப்ரபஞ்சப் பொருள் ஒன்றிலாவது சுகமென்பது கிடையாது. அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாக நாம் நமது அவிவேகத்தால் நினைக்கின்றோம். மனம் வெளியில் வரும்போது துக்கத்தை யனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும் போதெல்லாம் அது தன்னுடைய யதாஸ்தானத்திற்குத் திரும்பி ஆத்மசுகத்தையே அனுபவிக்கிறது. அப்படியே தூக்கம், சமாதி, மூர்ச்சை காலங்களிலும், இச்சித்த பொருள் கிடைக்கிற போதும், வெறுத்த பொருளுக்குக் கேடுண்டாகும் போதும் மனம் அந்தர்முகமாகி ஆத்மசுகத்தையே அனுபவிக்கிறது. இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளியே போவதும், உள்ளே திரும்புவதுமாக ஓய்வின்றி யலைகிறது. மரத்தடியில் நிழல் சுகமாயிருக்கிறது. வெளியில் சூரிய வெப்பம் கொடுமையா யிருக்கிறது. வெளியிலலையுமொருவன் நிழலிற் சென்று குளிர்ச்சியடைகிறான். சிறிது நேரத்திற்குப்பின் வெளிக்கிளம்பி வெப்பத்தின் கொடுமைக்காற்றாது, மறுபடியும் மரத்தடிக்கு வருகின்றான். இவ்வாறு நிழலினின்று வெயிலிற் போவதும், வெயிலினின்று நிழலிற் செல்வதுமா யிருக்கிறான். இப்படிச் செய்கிறவன் அவிவேகி. ஆனால் விவேகியோ நிழலைவிட்டு நீங்கான். அப்படியே ஞானியின் மனமும் பிரம்மத்தைவிட்டு நீங்குவதில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ பிரபஞ்சத்திலுழன்று துக்கப்படுவதும் சிறிது நேரம் பிரம்மத்திற்குத்திரும்பி சுகமடைவதுமாயிருக்கிறது. ஜகமென்பது நினைவே. ஜகம் மறையும்போது அதாவது நினைவற்றபோது மனம் ஆனந்தத்தை யனுபவிக்கின்றது. ஜகம் தோன்றும்போது அது துக்கத்தை யனுபவிக்கின்றது.
16
Keep
இச்சா ஸங்கல்ப யத்னமின்றி எழுந்த ஆதித்தன் சன்னிதி மாத்திரத்தில் காந்தக்கல் அக்கினியைக் கக்குவதும், தாமரை யலர்வதும், நீர் வற்றுவதும், உலகோர் தத்தம் காரியங்களிற் பிரவர்த்தித்து இயற்றி யடங்குவதும், காந்தத்தின் முன் ஊசி சேஷ்டிப்பதும் போல, ஸங்கல்ப ரகிதரா யிருக்கும் ஈசன் சன்னிதான விசேஷ மாத்திரத்தால் நடக்கும் முத்தொழில் அல்லது பஞ்ச கிருத்தியங்கட் குட்பட்ட ஜீவர்கள் தத்தம் கர்மானுசாரம் சேஷ்டித் தடங்குகின்றனர். அன்றி அவர் ஸங்கல்ப ஸகிதரல்லர்; ஒரு கருமமு மவரை யொட்டாது. அது லோக கருமங்கள் சூரியனை யொட்டாததும், ஏனைய சதுர்பூதங்களின் குறைகுணங்கள் வியாபகமான ஆகாயத்தை யொட்டாததும் போலும்.
17
Keep
எந்நூலிலும் முக்தி யடைவதற்கு மனத்தை யடக்க வேண்டு மென்று சொல்லப்பட் டுள்ளபடியால் மனோநிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்துகொண்டபின்பு நூல்களை யளவின்றிப் படிப்பதாற் பயனில்லை. மனத்தை யடக்குவதற்குத் தன்னை யாரென்று விசாரிக்க வேண்டுமே யல்லாமல் எப்படி நூல்களில் விசாரிப்பது? தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணாற் றானே யறியவேண்டும். ராமன் தன்னை ராமனென்றறியக் கண்ணாடி வேண்டுமா? “தான்” பஞ்ச கோசங்களுக் குள்ளிருப்பது. நூல்களோ அவற்றிற்கு வெளியிலிருப்பவை. ஆகையால் பஞ்ச கோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை நூல்களில் விசாரிப்பது வீணே. பந்தத்திலிருக்கும் தான் யாரென்று விசாரித்து தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்து கொள்வதே முக்தி. சதாகாலமும் மனத்தை ஆத்மாவில் வைத்திருப்பதற்குத் தான் ஆத்ம விசாரமென்று பெயர். தியானமோ தன்னை ஸச்சிதானந்த பிரம்மமாக பாவிப்பது. கற்றவை யனைத்தையும் ஒருகாலத்தில் மறக்க வேண்டிவரும்.
18
Keep
குப்பையைக் கூட்டித் தள்ளவேண்டிய ஒருவன் அதை யாராய்வதா லெப்படிப் பயனில்லையோ அப்படியே தன்னை யறியவேண்டிய ஒருவன் தன்னை மறைத்துக்கொண்டிருக்கும் தத்துவங்களனைத்தையும் சேர்த்துத் தள்ளிவிடாமல் அவை இத்தனையென்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை யாராய்வதாலும் பயனில்லை. பிரபஞ்சத்தை யொரு சொப்பனத்தைப் போலெண்ணிக்கொள்ளவேண்டும்.
19
Keep
ஜாக்ரம் தீர்க்கம். சொப்பனம் க்ஷணிக மென்பது தவிர வேறு பேதமில்லை. ஜாக்ரத்தில் நடக்கும் விவகாரங்களெல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ அவ்வளவு உண்மை யாகவே சொப்பனத்தில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்திற் றோன்றுகின்றன. சொப்பனத்தில் மனம் வேறொரு தேகத்தை யெடுத்துக் கொள்ளுகிறது. ஜாக்ரம், சொப்பன மிரண்டிலும் நினைவுகளும் நாமரூபங்களும் ஏககாலத்தில் நிகழ்கின்றன.
20
Keep
நல்லமனமென்றும் கெட்டமனமென்று மிரண்டுமனங்களில்லை; மனமொன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுப மென்று மிரண்டுவிதம். மனம் சுபவாசனை வயத்ததாய் நிற்கும்போது நல்லமன மென்றும், அசுபவாசனைவயத்ததாய் நிற்கும்போது கெட்டமன மென்றும் சொல்லப்படும். பிறர் எவ்வளவு கெட்டவர்களாய்த் தோன்றினும் அவர்களை வெறுத்தலாகாது. விருப்பு வெறுப்புகளிரண்டும் வெறுக்கத்தக்கன. பிரபஞ்ச விஷயங்களி லதிகமாய் மனத்தை விடக்கூடாது. சாத்தியமானவரையில், அன்னியர் காரியத்தில் பிரவேசிக்கக்கூடாது. பிறருக்கொருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்ளுகிறான். இவ்வுண்மையை யறிந்தால் எவன்தான் கொடாதொழிவான்?
21
Keep
தானெழுந்தால் சகலமு மெழும். தானடங்கினால் சகலமு மடங்கும். எவ்வளவுக் கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை யடக்கிக்கொண்டிருந்தால், எங்கேயிருந்தாலு மிருக்கலாம்.