Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Vicāra Saṅgraham
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
Keep
ஸ்வாமி! எப்போதுந் துக்கமற்ற நித்யானந்த நிலை எய்துதற்குரிய வுபாயம் யாது?
எங்கெங்கே சரீரமுள்ளதோ அங்கங்கே துக்கமு முள்ளதென வேதத்திற் கூறியுள்ளதன்றி, எல்லோர்க்கும் பொதுவான பிரத்யக்ஷஅநுபவமாக விருத்தலான், எப்போதும் சரீரமில்லாத தனது எதார்த்தசொரூபம் இன்னதென்று விசாரித்துணர்ந்து உள்ளவாறிருத்தலே அந்நிலையெய்துதற்குரிய வுபாயமாம்.
2
Keep
தனது எதார்த்தசொரூபத்தை விசாரித்துணர்வ தென்றா லென்ன?
எல்லோருக்கும் சுபாவமாக வுண்டாகும், “போனேன், வந்தேன், இருந்தேன், செய்தேன் என்பதாதிய அநுபவங்களிலிருந்தே அவ்வநுபவநிகழ்ச்சிக்குரிய வினைகளுக்கு முதலாக ‘நான்’ என்றதோர் போதம் தோற்றுகிறதல்லவா? அந்த போதத்தின் உண்மைவடிவை (நானார் என்ற விசாரத்தால்) விசாரித்துத் தானாயிருப்பதே தனது எதார்த்தசொரூபத்தை விசாரித்துணர்வ தென்பதாம்.
3
Keep
நானாரென்று விசாரிப்ப தெப்படி?
போதல் வருதலாதிய தொழில்கள் தேகத்தினவே யன்றி வேறன்மையால் தேகமே நானென்று சொல்வதாக வன்றோ தெரிகிறது? தேகம் பிறத்தற்குமுன் னின்மையானும், பஞ்சபூதாத்மகமாதலானும், சுழுத்தியி லபாவமாதலானும், பிணமாகப்போதலானும் அதை நானென்னும் போதமாகச் சொல்லுதல் கூடுமா? கட்டையைப்போன்ற ஜடபதார்த்தமாகிய இச்சரீரம் ‘நான், நான்’ என்று ஸ்புரித்து வழங்கிவருமா? இப்படி அவாந்தரமாகத் தேகத்தைக்குறித்துநானென்றெழும்போதமே தற்போதமென்றும், அகங்காரமென்றும், அவித்தை யென்றும், மாயை யென்றும், மலமென்றும், ஜீவனென்றும் பலவிதமாகச் சொல்லப்படுகிறது. இதைப்பற்றி விசாரியாதிருக்கலாமா? விசாரித்துணர்ந்துய்தற்கன்றோ சகலசாஸ்திரங்களும் ஏற்பட்டு, அத் “தற்போதநாசமே முக்தி” யென்று கோஷிக்கின்றன. ஆகவே, பிணமான தேகத்தைப் பிணமெனவே யிருத்தி வாக்கினாலும் நானென்று சொல்லாமலிருந்து இப்போது நானென்றெழுவதேது என்று கூர்மையாய் விசாரித்தால், அப்போது ஹ்ருதயத்தில் ‘நான், நான்’ என்னும் சப்தமில்லாமல் ஓர்வித ஸ்புரிப்பு அதாவது கண்டமாகவும் நானாவாகவுமிருந்த நினைவுகள் போய், அகண்டமாகவும் ஏகமாகவுமுள்ள ஞப்திமாத்திரம் தனக்குத்தானே தோற்றிக்கொண்டிருக்கும். அதனை விடாமல் சும்மாவிருந்தால் தேகம்நானென்னும் அகங்காரரூப ஜீவபோதத்தை முற்றிலும் நாசப்படுத்தி கற்பூரத்திற் பற்றிய நெருப்புப்போல் முடிவில் தானும் சாந்தமாய்விடும். இதுவே மோக்ஷமென்று பெரியோர்களாலும் சுருதிகளாலும் சொல்லப்படுகிறது.
4
Keep
அகம்வடிவ தற்போதத்தின் மூலத்தை விசாரிக்க அங்கு ஏதேதோ வெவ்வேறெண்ணங்கள் கணக்கற்றனவாய்த் தோற்றிக்கொண்டிருக்கின்றனவேயன்றி நானென்றதோர் தனி நினைவு தோன்றவில்லையே?
எழுவாயாகிய முதல்வேற்றுமை தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் மற்றவேற்றுமைகளில் வரும் வாக்கியங்களனைத்தும் முதல்வேற்றுமையை ஆச்ரயித்தே விளங்கல்போன்று ஹ்ருதயத்திற்றோன்றும் நினைவுகளனைத்தும் ‘தேகோகம்’ புத்திவடிவ நானென்னும் முதல்விருத்தியாகிய அகங்காரத்தை ஆச்ரயித்தே விளங்கலானும், அகங்காரத்தினெழுச்சியே மற்றெல்லாநினைவுகளினெழுச்சிக்கும் காரணமாகவும் மூலமாகவுமிருத்தலானும், சம்சாரமென்னும் மாயாவிருக்ஷத்தின்வேராகிய அகங்காரரூபதற்போதத்தை நாசமாக்கின் மற்றெல்லாநினைவுகளும் வேரற்றவிருக்ஷம் போல் அடியோடு நாசமாகும். தான் செய்யும் நிஷ்டைக்குப் பிரதிபந்தமாக எத்தனை நினைவுகள் தோன்றினாலும் மனதை அவ்வழியே செல்லவொட்டாமல் ஆன்மசொரூபமாகிய தன்னிடத்திலேயேயிருத்தி நம்முன்னே என்னென்ன விசித்திரங்கள் நடக்கின்றன? நடப்பன நடக்கட்டும் பார்க்கலாம் என்று சாக்ஷியைப்போல் விலக்ஷணமாயிருந்து பார்த்துக்கொண்டிருக்கப் பழகுவதே அதாவது தோற்றங்கள் மயமாகாது எப்போதும் தன்னைவிடாமலிருப்பதே முற்கூறிய பிரதிபந்தங்களுக்கெல்லாம் மூலமான தேகாத்மபுத்திரூப மனோநாசத்திற்கான தக்கவுபாயமாம். அகங்காரத்தை இலகுவாய்க் கெடுக்கத்தகும் இம்மார்க்கமே பக்தியென்றும், தியானமென்றும், யோகமென்றும், ஞானமென்றும் கூறத்தகும். ஹ்ருதயத்திலுள்ள அஹம் சொரூபமான ஆத்மாகாரமாகவே கடவுளிருப்பதாலும், நினைப்புமாத்திரமே பந்தமென்று சுருதிகள் முறையிடுவதாலும் எப்படியேனும் நானென்னும் நினைவுரூபமானமனதை அவரிடத்திலேயே யிருத்திவிட்டு எப்போதும் அவரை மறவாது சும்மாவிருத்தலே சிரேஷ்டமான சாதனம். இதுவே சுருதிகளின் முடிவான சித்தாந்தம்.
5
Keep
விசாரம் ஸ்தூலதேகத்திலுள்ள ஆன்மபாவத்தை மாத்திரம் நீக்குதற்குச்சாதனமா? சூக்கும, காரண தேகங்களிலுள்ள ஆன்மபாவங்களை நீக்குதற்கும் சாதனமா?
ஸ்தூலதேகத்தைப்பற்றியே மற்றதேகங்கள் ஜீவித்திருப்பதானும், தேகம்நான் என்பதில் பஞ்சகோசரூபமான முத்தேகங்களுமே அடங்கிவிட்டதானும், ஸ்தூலதேகத்திலுள்ள ஆன்மபாவத்தினழிவே மற்றதேகங்களிலுள்ள ஆன்மபாவங்களினழிவாகலானும் விசாரம் மும்மைத்தேகங்களிலுமுள்ள ஆன்மபாவங்களைப் போக்கற்கே சாதனமாகிறது.
6
Keep
விருத்திபேதங்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரமெனப் பலவிதங்களாயிருக்க மனோநாசமாத்திரமே முக்தியென்பதெப்படி?
மனத்தின் தத்துவத்தைக் கூறும் சாஸ்திரங்களில் “நாம் புஜிக்கும் அன்னத்தின் சூக்ஷ்மபாகத்தாற் கெட்டிப்பட்டு, இராகத்வேஷகாமக்ரோதாதிகளால்விருத்தியடைந்து, மனம், புத்தி, சித்தம், அகங்காரமென்னும் இவற்றின் சமுதாயமாய், மனமென்னும் பன்மையொருமைப் பெயரையே பெற்றதாய், நினைத்தல் நிச்சயித்தலாதிய தருமங்களையுடையதாய், ஞானத்தாலறியப்பட்ட திருசியமாய், ஜடமாய், ஜடமாயினும் ஞானத்தின் சேர்க்கையால் (தப்தாயப்பிண்டம் போன்று) சேதனம் போலவே தோற்றுவதாய், பரிச்சின்னமாய், அநித்தியமாய், அவயவாகாரமாய், அரக்கு சுவர்ண மெழுகாதிகள் போன்று பரிணாம முறுவதாய், சர்வதத்வாத்மகமாய், சக்ஷுரிந்திரியாதிகளுக்கு நேத்திராதிபோல ஹ்ருதயகமலத்தை ஸ்தானமாகவுடையதாய், ஜீவனுக்கு உபாதியாய், தானொருபொருளை நினைத்து விருத்திரூபமாய் மூளையிலுள்ள அறிவோடுங்கூடி பஞ்சேந்திரியங்களின் வழியாக அவ்விஷயங்களை (அறிவோடுங் கூடியுள்ள) மூளையாற் கூட்டிக்கொடுக்கப்பெற்று அவ்விஷயங்களை யறிந்தநுபவித்து திருப்தியடைவதாய் விளங்கும் பதார்த்தமெதுவோ அதுவே மனம்” என்று மனத்தின் சொரூபத்தைக் கூறியிருத்தலால், ஒருவனுக்கே வெவ்வேறு வேலையில் வெவ்வேறு நாமம் வருவது போன்று மனமொன்றே விருத்தி பேதங்களை முன்னிட்டு மனம், புத்தி, சித்தம், அகங்காரமென்ற நாமங்களால் வழங்கப்படுகிறதே யன்றி வேறில்லை. இம்மனமே சர்வதத்வாத்மக ஜீவேச்வரஜகத்சொரூபமா யிருத்தலான் இது எப்போது ஞானத்தால் ஆன்மாகாரமாகுமோ அப்போதே எல்லாம் ப்ரஹ்மசொரூபமாகிற கைவல்யமாகு மென்று சொல்லப்படுகிறது.
7
Keep
மனம், புத்தி, சித்தம், அகங்காரமாகிய இந்நான்கும் ஒருபொருளே யென்றால் இவைகளுக்குத் தனித்தனிஸ்தானங்கள் கூறப்படுவதேன்?
மனதிற்கு ஸ்தானம் கண்டமென்றும், புத்திக்கு முகம் அல்லது ஹ்ருதயமென்றும், சித்தத்திற்கு நாபியென்றும், அகங்காரத்திற்கு ஹிருதயம் அல்லது சர்வாங்கமென்றும் பலவிதங்களாகக் கூறியிருந்தாலும், இவற்றின் சமஷ்டியாகிற ஒரே மனமென்னும் அந்தக்கரணத்திற்கு ஹ்ருதயமே ஸ்தானமென்று சுருதிகளில் முடிவாகக் கூறியிருக்கிறது.
8
Keep
அகக்கரணமாகவுள்ள மனமே ஜீவேச்வரஜகத்ரூப சர்வதத்வாத்மகமாக விளங்குகிறதென்ப தெவ்வாறு?
விஷயங்களையறிதற்கு சாதனமாய் இந்திரியங்கள் வெளியிலிருத்தலாற் புறக்கரணமென்றும் மனம் உள்ளிருத்தலால் அகக்கரண மென்றும் கூறப்பட்டாலும், தேகத்தைக்குறித்தே அகம்புற மென்று சொல்லப்படுகிறதே யன்றி உண்மையில் உள் வெளி யென்பதேயில்லை. ஆகாசத்தைப் போன்று ஸ்வச்சமாயிருத்தலே மனத்தின் சொரூபம். ஹ்ருதயமென்றும் மனமென்றும் சொல்லப்படுவது அந்தர்பஹிராய்த் தோன்றும் தத்துவங்களின் சேர்க்கையேயாம். ஆகவே, சர்வ நாமரூபக் காட்சிகளும் மனோரூபமே யென்பதிற் சம்சயமில்லை. வெளியிற்றோன்றும் சகலமும் உள்ளேயே யிருக்கிறதன்றி வெளியிலில்லை யென்பதை அறிவித்தற்கே வேதங்களிலும் எல்லாம் ஹ்ருதயாகாரமாகவே வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஹ்ருதயமென்பது ப்ரஹ்மத்தையன்றி யில்லை.
9
Keep
ஹ்ருதயம் ப்ரஹ்மத்தை யன்றி யில்லையென்ப தெப்படி.
ஆன்மா ஜாக்கிர சொப்பன சுழுப்திகளில் நேத்திரம், கண்டம், ஹ்ருதயமென்னும் ஸ்தான முன்னிலையாகப் போகங்களைப் புஜிக்கினும் அது தன்னுடைய முக்கிய ஸ்தானமாகிய ஹ்ருதயத்தை விட்டு எப்போதும் நீங்குகிறதில்லை. ஸர்வாத்மகமான ஹிருதயகமல மத்தியில் அதாவது மனாகாசத்தில் நானென்னும் அவ்வாத்மஜோதி பிரகாசிக்கிறது. இப்படி ஒவ்வொரு தேகத்திலும் விளங்குவதால் இதையே சாக்ஷியென்றும் துரியமென்றும் சொல்லுவார்கள். இந்த நானென்னும் ஜோதியின் அந்தர்க்கதமாய் ஸர்வதேகங்களிலும் நானற்று விளங்கும் பரப்ரஹ்மமாகிற ஆத்மாகாசமே (ஞானாகாசமே) எதார்த்த வஸ்து. இதுவே துரியாதீதம். ஆகையால் ஹ்ருதயமென்பது ப்ரஹ்மத்தையன்றி யில்லையென்று சொல்லப்படுகிறது. மேலும் ப்ரஹ்மம் எல்லா ஜீவர்களினுடைய ஹ்ருதயங்களிலும் ஆன்ம சொரூபமாகப் பிரகாசிக்கிற காரணத்தாலேயே ப்ரஹ்மத்திற்கு * ஹ்ருதய மென்றதோர் பெயருமுண்டு. ஹ்ருதயம் என்பதன் பொருள், ஹ்ருத்+அயம் என்ற பிரிவால் ப்ரஹ்மமே யாகிறது. ஆன்மசொரூபமாகப் பிரகாசிக்கும் ப்ரஹ்ம வஸ்துவானது எல்லா ஜீவர்களினுடைய ஹ்ருதய ஸ்தானத்தில் நிவசிக்கிறதென்பதற்கு சர்வ ஜனங்களும், ‘நான், நான்’ என்று மார்பைத் தொட்டுக் காட்டுவதே போதுமான சாக்ஷி.
10
Keep
சர்வ ப்ரபஞ்சமும் மனதின் சொரூபமே யெனின் ப்ரபஞ்சம் பொய்யென்றல்லவோ ஏற்படுகிறது. அப்படியானால் ப்ரபஞ்சத்திற்கு வேதத்தில் ஸ்ருஷ்டி கூறப்பட்டிருப்பதேன்?
ப்ரபஞ்சம் சுத்தப்பொய்யே யென்பதிற் சம்சயமில்லை. பொய்யான வுலகத்தைப் பொய்யாக்கி மெய்யான ப்ரஹ்மத்தை அறிவிப்பதிலேயே வேதத்தின் முக்கிய கருத்து. இதுபற்றியே வேதங்கள் உலகிற்கு ஸ்ருஷ்டியை அங்கீகரித்தனவேயன்றி வேறில்லை. மேலும் மந்தாதிகாரிகளுக்கு க்ரமஸ்ருஷ்டியால் ப்ரஹ்மத்தில் ப்ரக்ருதி, மகதத்வம், தன்மாத்திரை, பூதம், உலகம், தேகமாகிய இவை க்ரமமாக வுண்டாயின வென்றும், தீவிர அதிகாரிகளுக்கு யுகபத்ஸ்ருஷ்டியால் ஆன்மாவாகிய தன்னை யறியாத தோஷத்தினாலுண்டான தனது நினைவுகளாலேயே சொப்பனம்போன்று இவ்வுலகுண்டாயிற்றென்றுங் கூறும். இங்ஙனம் உலகஸ்ருஷ்டியைப் பலவிதங்களாகக் கூறுவதிலிருந்தே, எப்படியேனும் ப்ரபஞ்சத்தைப் பொய்யென்று சாதித்து ப்ரஹ்மத்தை அறிவிப்பதிலேயே வேதத்தின் தாத்பரியமென்பது பெறப்படும். ஜகம் மித்தை யென்பதை சொரூபாநந்தவநுபவரூப அநுபூதி நிலையில் எல்லோரும் பிரத்தியக்ஷமாகவே அறியலாம்.
11
Keep
சதா சலனத்தையே வடிவாகவுடைய மனதிற்குச் சொரூபாநுபவங் கூடுமோ?
மனதிற்குச் சத்துவகுணமே ஸ்வபாவமாகலானும், அது ஆகாசத்தைப் போன்று ஸ்வச்சமாயும், நிர்மலமாயு மிருத்தலானும் மனமென்பது உண்மையில் ஞான சொரூபமே. அத்தகைய ஸ்வபாவ நிலையில் அதற்கு மனமென்னும் பெயருமில்லை. ஒன்றை யொன்றாக அறியும் விபரீத ஞானமே மனமெனப்படுகிறது. ஞானமாத்திரமாக விருந்த சுத்தசத்துவமன தானது தன் ஞானசொரூபத்தை மறந்த அவித்தையால் தானே தமோகுணவசத்தாய் உலகரூபமாகப் பரிணமித்து, ரஜோகுணவசத்தாய் தேகாதிகள் நானென்றும் உலகம் சத்தியமென்றும் பாவித்து, இதன்மூல முண்டாகும் ராகத்வேஷாதிகளால் புண்ணியபாபகர்மங்களை சம்பாதித்து, அவ்வாசனையால் ஜனனமரணங்களை யடையும். அநேக ஜன்மங்களிற் செய்துவந்த நிஷ்காமகர்மங்களால் மலம் (பாபம்) நீங்கின மனமானது சற்குரு மூலமாய் சிரவணமனனங்க ளியற்றி நெடுங்காலம் ப்ரஹ்மத்யானமாகிற அதாவது அஹம் ப்ரஹ்மமென்னும் ஆத்மாகார மனோவிருத்தியின் சஹஜஸ்திதியைப் பெறுதற்கான நிதித்யாசனம் செய்யவே, மனதின் தமோகுணரூபமான உலகாகாரபரிணாம மடைதலும் ரஜோகுணரூபமான அவற்றிலுள்ள சலனமும் நீங்கும். நீங்கவே மனம் சூக்ஷ்மமும் நிச்சலமுமாகும். ஸ்தூலமான (பெரிய) கட்டபாரையால் மெல்லிய பட்டு வஸ்திரத்தை இழையிடக் கூடாதது போலவும், காற்றினால் அதிக சலனமாகவுள்ள தீபத்தால் அதி சூக்ஷ்மமான வஸ்துக்களின் லக்ஷணங்களை நிர்ணயிக்கக் கூடாததுபோலவும், ஸ்தூலமாகவும் சலனமாகவுமுள்ள ரஜோதமோகுணவசத்தான அசுத்தமனத்தால் மாத்திரம் அதி சூக்ஷ்மமும் நிச்சலமுமான வஸ்துவை அனுபவித்தல் கூடாதே யொழிய, முற்கூறியபடி தியானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலமுமான சுத்தமனத்தில் சொரூபாநந்தம் ஆவிர்ப்பவிக்கும் (தோன்றும்). மனமின்றி அநுபவங்கூடாதாகையால் அதிசூக்ஷ்மமான விருத்தியோடுங்கூடிய தெளிந்தமனத்தால் அம்மயமாகவேயிருந்து சொரூபாநந்தம் அநுபவித்தல் கூடும். அப்போது தான்ப்ரஹ்மசொரூபமாயிருப்பது நன்றாய் அநுபவமாகும்.
12
Keep
பிராரப்தாநுசாரமான வ்யவகாரங்களைச் செய்ய வேண்டியிருக்கிற மனதிற்கு வ்யவகாரநிலையிலேயே முற்கூறிய சொரூபாநுபவம் வாய்க்குமா?
ப்ராஹ்மணன் என்ன வேஷம் போட்டுக்கொண்டு ஆடினாலும் அவன் மனதில் ப்ராஹ்மணனென்னும் பாவம் எப்படியோ, அப்படியே எந்தவ்யவகாரங்களி விருந்தாலும் தேகாதிகள் நானெனத் தோற்றாமல் ஆன்மாநா னென்னுந் திடபாவம் வரவேண்டும். மனம் தன்நிலையை விட்டுப் பஹிர்முகப்படுமானால் உடனே ஓ! ஓ!! தேகாதிகள் நாமல்லவே நாமார்? என்னும் விசாரத்தால் மறுபடியும் தன்னிலையிலேயே யிருத்தவேண்டும். நானாரென்னும் விசாரம் சர்வதுக்க நிவிருத்திக்கும் பரமார்த்த ப்ராப்திக்குமான முக்கிய ஹேது. இப்படித் தன்னிலையில் மனம் அடங்க அடங்க, யாதொரு தடையுமின்மைபால் சொரூபாநுபவம் தானாகவே வாய்க்கும். அப்பால் விஷய சுகதுக்கங்கள் மனதில் தாக்கா. எல்லாம் ஸ்வப்நம்போல் பற்றற்றுத் தோன்றும். எப்போதும் சர்வ பரிபூரணமாகவுள்ள ஸ்வாத்ம பாவனையை மறவாதிருத்தலே முடிவான பக்தியும் யோகமும் ஞானமும் மற்றுமுள்ள எல்லா தபசுகளுமா மென்று பெரியோர் கூறுகின்றனர்.
13
Keep
கருமங்களிற் பிரவிருத்திக்குங்கால் இக்கருமத்தைச் செய்யும் கர்த்தாவும் இக்கருமபலனை யநுபவிக்கும் போக்தாவும் நாமல்ல. இது திரிகரணங்களின் சேஷ்டையாகும் என்ற பாவத்துடனிருக்கலாமா?
ஆத்மதேவதையாகிய தன்னிடத்தி லிருத்தியதும், எப்போதும் அதைவிட்டு நீங்காமல் வ்யவஹாரங்களில் உதாசீனபாவத்துட னிருக்கிறதுமான மனது மேற்கூறியபடி சங்கற்பித்தல் கூடுமா? இப்படிப்பட்ட சங்கற்பங்களன்றோ பந்தம்? இவ்வித நினைவுகள் வாசனையால் வந்தாலும் மனதை நினைவின்வழி செல்லவிடாமல் தன்னிலையிலிருத்த முயல்வதோடு வ்யவஹாரங்களில் உதாசீன பாவத்தோடும் இருத்தல் வேண்டும். மனதில் இது நல்லதா? அது நல்லதா? இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா வென்பதாதிய நினைவுகளுக்கு மிடங்கொடாமல் அத்தகைய நினைவுகளேதேனுந் தோன்றுமுன்னரே ஜாக்ரதையாய்த் தெரிந்து அதைத் தன்னிலையி லிருத்திவிட வேண்டும். கொஞ்ச மிடங்கொடுத்தால் தனக்கு ஹிதமாயிருப்பவனைப் போலிருந்து கெடுதி செய்யும் ஹிதசத்துருவைப்போல நம்மைத் தலைகீழாய்த் தள்ளிவிடும். தன்னை மறப்பதாலன்றோ இவ்வித நினைவுகள் தோன்றி மேன்மேலும் அநர்த்த முண்டாக்குகின்றன? விவேகத்தால் நானொன்றும் செய்யவில்லை. எல்லாம் கரணங்களின் சேஷ்டைகளே என்று சங்கற்பித்தல் வாசனையாகிற நினைவின்வழி செல்லும் மனதைத் தடுத்தற்குரிய உபாயமே யென்றாலும், நினைவின்வழி சென்றாலன்றோ முற்கூறியபடி விவேகத்தால் தடுக்கவேண்டும்? தன்னிலையி லிருக்கிற மனது நானென்றும், எனக்கு வ்யவஹாரமிருக்கிறதென்றும் சங்கற்பிக்குமா? எவ்விதத்தினும் மெல்ல மெல்ல ஈச்வரனாகிற தன்னை மறவாதிருக்கவே முயற்சிக்க வேண்டும். அது ப்ராப்தியானால் எல்லாம் சித்தியாகும். மற்றெவ்விஷயங்களிலும் மனதைச் செலுத்தவேண்டாம். பித்தனைப்போல் கர்மத்தால் நேரிட்ட வ்யவஹாரங்களைச் செய்தாலும் நான் செய்கிறேனென்ற நினைவு வராமல் தன்னிலையிலேயே மனதை வைத்திருக்கவேண்டும். உதாசீன பாவத்துடன் எத்தனையோ பக்தர்கள் எவ்வளவோ வ்யவஹாரங்களைச் செய்திருக்கவில்லையா?
14
Keep
சந்நியாசத்தின் யதார்த்தமான தாத்பரியமென்ன?
சந்நியாசமென்பது நானென்னும் சங்கற்பத்யாகமே யன்றி வெளி விஷயங்களை விடுவதல்ல. இந்த சந்நியாசமுள்ளவனுக்கு ஏகாந்தத்திலிருந்தாலும் அபாரசம்சாரத்திலிருந்தாலும் சமமாகவே தோன்றும். * வேறு விஷயத்தில் மனதைச் செலுத்தியிருக்கும்போது பக்கத்திலுள்ளது தோன்றாததுபோல ஞானி எவ்வளவு வ்யவஹாரங்களைச் செய்யினும் நானென்ற போதம் வராமல் தன்னிடத்திலேயே மனதிருப்பதால் அவன் ஒன்றும் செய்யாதவனேயாம். தான் அசையாமற் படுத்திருந்தும் கனவில் தலை கீழாக விழுவதாய்க் காண்பதுபோல அஞ்ஞானி அதாவது நானென்பதறாதவன் ஏகாந்தனாய் சதா நிஷ்டையிலிருந்தாலும் சர்வ வ்யவஹாரங்களையும் செய்த்வனேயாம் என்று பெரியோருங் கூறியிருக்கின்றனர்.
15
Keep
கரணேந்திரியாதிகள் அறியுந் தருமத்தையுடையனவாக விருந்தும் அவை திருசிய பதார்த்தங்களெனப் படுவதென்னை?
திருக்கு அல்லது அறிபொருள் |
திருசியம் அல்லது அறிபடுபொருள்
(1) பார்ப்பவன் |
கடம்
இனியும்,
(2) கண் |
தேககடாதிகள்
(3) கண்ணிந்திரியம் |
கண்
(4) மனம் |
கண்ணிந்திரியம்
(5) ஜீவன் |
மனம்
(6) அறிவு |
ஜீவன்
மேற்கண்டபடி அறிவாகியநாமே எல்லாபதார்த்தங்களையும் அறிவதால் நாமே திருக்கெனப்படுவோம். கடாந்தமாயுள்ள பதார்த்தங்கள் யாவும் நம்மால் அறியப்படுவதால் திருசியங்களாம். மேற்காட்டியுள்ள அறிவறியாமை யடுக்குகளிற் கூறப்படும் திருக்கு திருசியங்களிலும் ஒன்று மற்றொன்றுக்குத் திருக்காக விருப்பினும் அது வேறொன்றுக்கு திருசியமாகலான் அவையாவும் உண்மையில் திருக்காகா. நாம் எல்லாவற்றையு மறிவதால் திருக்கென்றும் ஒன்றாலும் அறியப்படாததால் திருசியமன்றென்றும் சொல்லப்பட்டாலும், திருசியங்களைப்பற்றியே நாம் திருக்கென்று வழங்கப்படுகிறோமே யன்றி உண்மையில் திருசியமென்பது நமக்கன்னியமின்மையால் நாம் அவ்விரண்டிற்கும் அதீதமான பொருளாவோம். ஏனையவெல்லாம் திருக்கு திருசியங்களுக்கு உட்பட்டனவே.
16
Keep
அகங்காரம், ஜீவன், ஆன்மா, ப்ரஹ்மம் ஆகிய இவற்றிற்குத் தாதான்மிய முண்டாவ தெவ்வாறு?
திருஷ்டாந்தம் |
தாஷ்டாந்தம்
(1) அயப்பிண்டம் |
அகங்காரம்.
(2) தப்தாயப்பிண்டம் |
ஆன்மஸ்வபாவத்தோடு அத்தியாசமாய்த் தோற்றுகிற ஜீவன்.
(3) தப்தாயப்பிண்டத்திலுள்ள அக்னி |
தேகந்தோறும் விளங்கும் ஜீவனிலுள்ள சிற்பிரகாசம் அதாவது கூடஸ்த ப்ரஹ்மம்.
(4) ஏகமாயுள்ள அக்னிஜ்வாலை |
ஏகமாயுள்ள வ்யாபக ப்ரஹ்மம்.
மேற்காட்டியுள்ள திருஷ்டாந்தத்தால் அகங்கார, ஜீவ, சாக்ஷி, சர்வசாக்ஷிகளுடைய தாதான்மியம் விளங்கும்.
தட்டான் மெழுகுருண்டையில் கணக்கற்ற நானா லோகங்களின் அணுக்களடங்கி ஒரே மெழுகாகக் காணப்படுவது போன்று, சுழுத்தியில் எல்லா ஜீவர்களுடைய ஸ்தூல சூக்கும தேகங்களும் ஒரேயிருட்டாகிய அவித்தை அதாவது சமஷ்டிமாயையில் அடங்கி ஆத்மாவில் லயித்து ஒன்றுபட்டிருத்தலால் எங்கும் ஒரே இருட்டைக் காண்கிறார்கள். இந்த சுழுத்தியாகிய இருட்டிலிருந்து சூக்குமதேகம் அதாவது அகங்காரமும், அதிலிருந்து ஸ்தூலதேகமும் உண்டாகிறது. அகங்கார முண்டாகிற பொழுதே தப்தாயப்பிண்டம் போன்று ஆன்ம ஸ்வபாவத்தோடும் அத்யாசமாய்த் தோன்றுகிறது. இங்ஙனம் சிற்பிரகாசத்தோடு தாதான்மியமாகக் கூடியிருக்கும் மனமாகிய அகங்காரரூபனான ஜீவனையன்றி ஜீவசாக்ஷியாகிய ஆன்மாவும், ஆன்மாவையன்றி சர்வசாக்ஷியாகிய ப்ரஹ்மமும் இன்றாம். தப்தாயப்பிண்டமானது கொல்லனா லெவ்வாறடிபட்டு விகாரமுற்றாலும் எப்படி அதிலுள்ள அக்னிமாத்திரம் அவற்றால் யாதொரு சலனமும் அடைவதின்றோ அப்படியே, ஜீவன் எவ்வளவு வ்யவஹாரங்களிலுழன்று சுகதுக்கங்களை யனுபவித்தாலும் அதிலுள்ள ஆன்மஜோதி மாத்திரம் அவற்றால் யாதொரு சலனமுமின்றி ஆகாசம்போல் வ்யாபகமாயும், ஞானமாத்திரமாயும், ஏகமாயும் விளங்கும் ப்ரஹ்ம சொரூபமாகவே ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிறது.
17
Keep
ஹ்ருதயத்தில் ஆன்மாவே ப்ரஹ்மமாகப் பிரகாசிக்கிறதென்ற தெப்படி?
தீபஜ்வாலையினுள்ளேயுள்ள காலியிடத்தி லிருக்கும் பூதாகாசமானது அந்த ஜ்வாலையி னுள்ளும்புறம்பும் அபேதமாய் நிறைந்து எல்லையற்று விளங்குதல்போன்று ஹ்ருதயத்தில் ஆன்மஜோதியினுள்ளேயுள்ள ஞானாகாசமும் அவ்வான்மஜோதியி னுள்ளும்புறம்பும் அபேதமாய் நிறைந்து எல்லையற்று விளங்குகிறது. இதுவே ப்ரஹ்மமென்பதாம்.
18
Keep
எகமாயும் அகண்டமாயும் விளங்கும் சொப்பிரகாச வடிவ ஆன்மஜோதியின்கண் அவஸ்தாத்ரயம், தேகத்ரயமாதிய கற்பனைகள் தோற்றுவதும், தோற்றினும் ஆன்மா மாத்திரம் எப்போதும் அசலமாகவே யுள்ளதென்பது மெவ்வாறு?
திருஷ்டாந்தம் |
தாஷ்டாந்தம்
(1) தீபம் |
ஆன்மா.
(2) கபாடம் |
நித்திரை.
(3) வாயிற்படி |
மஹதத்வம்.
(4) உட்சுவர் |
அவித்தை அல்லது காரணதேகம்.
(5) கண்ணாடி |
அகங்காரம்.
(6) ஜன்னல்கள் |
ஞானேந்திரிய பஞ்சகம்.
(7) உள்மனை |
காரணதேகம் விளங்கும் சுழுத்தி.
(8) நடுமனை |
சூக்ஷ்மதேகம் விளங்கும் சொப்பனம்.
(9) முற்றம் |
ஸ்தூலதேகம் விளங்கும் ஜாக்ரம்.
ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) யுட்சுவரும் நித்திரைக்கதவும் கூடின காரணதேக (7) வுள்மனையில் தானே விளங்க, காலகருமாதி பிராணனால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹதத்வ (3) வாயிற்படிக்கடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்மப் பிரதிபலனப் ப்ரகாசத்துடன சொப்பன (8) நடுமனையையும், பஞ்சேந்திரியப் (6) பலகணி வழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி, காலகருமாதி வாயுவால் நித்ராகபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்றுத் தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால், ஆத்மாவின் அசலமான விருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும், அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.
19
Keep
விசாரலக்ஷணங்களை இவ்வளவு விஸ்தாரமாகக் கூறக்கேட்டும் என் மனம் சிறிதும் சாந்தி யடையவில்லையே! இதற்குக் காரண மென்ன?
மனோபலம் அதாவது சித்தத்தினொருமைப்பா டின்மையே அதற்குக் காரணம்.
20
Keep
மனோபலமின்மைக்குக் காரணம் யாது?
ஆன்ம விசாரத்துக்குத் தன்னை அதிகாரியாகச் செய்கிற சாதனங்களான தியான யோகமாதியவற்றில் முன்னரே வேண்டிய அளவு கிரமமாய்ப் பயின்று, அதனால் இடையறாத சஜாதீய விருத்தியின் பிரவாகத்தை சஹஜமாகப் பெற்றிருக்கும் பரிபக்குவமுள்ள மனதாயிருந்தால், இவ்விசார சிரவணஞ் செய்தவுடனே தனது எதார்த்த சொரூபத்தை அபரோக்ஷமாகத் தெரிந்து எப்போதும் தன்னிலையினின்றும் நீங்காது பரமசாந்தியுடன் விளங்கும். இங்ஙனம் பரிபக்குவமடையாத மனதிற்கு விசாரசிரவணத்தால் உடனே அபரோக்ஷ ஞானமும் உபசாந்தமும் வாய்ப்பது துர்லபமே; என்றாலும், சிறிது காலம் மனவொடுக்கத்திற்குரிய சாதனங்களிற் பழகி வந்தால் காலக்கிரமத்தில் சித்தோபசாந்தம் சித்திக்கும்.
21
Keep
மனவொடுக்கத்திற்குரிய சாதனங்களில் முதன்மையான தேது?
ப்ராணவொடுக்கமே மனவொடுக்கத்திற்குச் சாதனமாம்.
22
Keep
ப்ராணநிரோத முண்டாவதெப்படி?
கேவலகும்பகத்தாலேனும் ப்ராணாயாமத்தாலேனும் ப்ராணநிரோத முண்டாகும்.
23
Keep
கேவலகும்பக மென்றா லென்ன?
இரேசக பூரகங்களின்றியே ஹ்ருதயத்தில் ப்ராணனை ஸ்திரப்படுத்துவதாம். இது ப்ராணோபாசனை முதலியவற்றால் சித்திக்கத்தக்கது.
24
Keep
ப்ராணாயாம மென்றா லென்ன?
யோகசாஸ்திரங்களிற் கூறியுள்ள கணக்கின்படி இரேசக, பூரக, கும்பகங்கள் வாயிலாய் ப்ராணனை ஹ்ருதயத்தில் ஸ்திரப்படுத்துவதாம்.
25
Keep
ப்ராணநிக்ரகம் மனோநிக்ரகத்திற்குச் சாதனமா யிருப்பதெப்படி?
ப்ராணனைப் போலவே மனமும் வாயுவின் அம்சமாகலானும் இவ்விரண்டுக்குமே சலிக்குந்தன்மை சுபாவமாகலானும் இவ்விரண்டின் பிறப்பிடம் ஒன்றே யாகலானும் இவ்விரண்டுள் ஒன்றி னொடுக்கமே மற்றதி னொடுக்கத்திற்குக் காரணமாகலானும் ப்ராணநிரோதம் மனோநிரோதத்திற்குச் சாதனமென்பதிற் சந்தேகமில்லை.
26
Keep
ப்ராணபந்தம் மனோலயத்திற்கு மாத்திரம் சாதனமாகிறதே யன்றி மனோநாசத்திற்குச் சாதன மாகாமையான், மனோநாசத்திலேயே தாற்பரியமுடைய விசாரத்திற்கு இது சாதனமாவ தெப்படி?
ஆன்மசாக்ஷாத்காரம் சித்தித்தற்குரிய சாதனங்களை அஷ்டாங்கயோகம் அஷ்டாங்கஞானமென இரு பிரிவுகளாகச் சுருதிகளிற் கூறியுள்ளபடியால் அந்தயோகாஷ்டாங்கங்களிலொன்றாகிய ப்ராணாயாமத்தினாலாவது அல்லது கேவலகும்பகத்தினாலாவது பந்தப்பட்ட மனதை அதோடு விட்டுவிடாமல் மேற்சாதனங்களாகிய ப்ரத்தியாகார முதலியவற்றில் கிரமமாகப் பழக்கிவரின் முடிவில் விசாரபலரூப சொரூபசாக்ஷாத்காரம் பெறுதல் திண்ணம்.
27
Keep
யோகாஷ்டாங்கங்க ளெவை?
இயமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி யென்பனவாம். இவற்றில்—
* (1) இயமம்:—அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரமசரியம், அபரிக்கிரகமாதிய ஒழுக்கமுடைமையாம்.
* (2) நியமம்:—சௌசம், சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈச்வரப்ரணிதானமாதிய ஒழுக்கமுடைமையாம்.
(3) ஆசனம்:—ஆசன பேதங்களில் 84 முக்கியம். அவற்றில் சிம்ஹம், பத்ரம், பத்மம், சித்தம் ஆகிய விந்நான்குமே சிரேஷ்டமென்றும், இவற்றினும் † சித்தாசனமே மிக சிரேஷ்டமென்றும் யோகசாஸ்திரங்கள் கூறுகின்றன.
(4) ப்ராணாயாமம்:—சுருதிகளிற் கூறியுள்ள மாத்திரைக் கணக்கின்படி ப்ராணனை வெளிவிடுவது இரேசகமென்றும், உட்கொள்ளுவது பூரகமென்றும், ஹ்ருதயத்தில் நிறுத்துவது கும்பகமென்றும் சொல்லப்படும். மாத்திரையளவுகளைப்பற்றிச் சில சாஸ்திரங்களில் இரேசக பூரகங்களுக்குச் சமமும் கும்பகத்திற்கு இரண்டுபங்கும், சில சாஸ்திரங்களில் இரேசகத்தைப்போல் பூரகத்திற்கு இரண்டுபங்கும் கும்பகத்திற்கு நான்குபங்கு மெனச் சொல்லப்பட்டிருக்கிறது. மாத்திரை யென்பது காயத்ரி மந்திரத்தை ஒருமுறை யுச்சரிக்குங் காலமாகச் சொல்லப்படுகிறது. இவ்வித இரேசக, பூரக, கும்பகங்களடங்கிய ப்ராணாயாமத்தைத் தன்னாலியன்ற அளவு மிருதுவாகவும் க்ரமமாகவும் நாடோறு மப்யசித்துவரின் சரீரத்தில் ஓர்வித இளைப்புடன் சலனமற்று ஆனந்தமாயிருத்தற்கான இச்சை மனத்திற்குண்டாகும். இதன்பின் ப்ரத்தியாகாரம் செய்யவேண்டும்.
(5) ப்ரத்தியாகாரம்:—வெளியிலுள்ள நாமரூபங்களிற் செல்லவொட்டாமல் மனதை ஒருவழிப்படுத்தலாம். இது காறும் ஓடியுழன்ற மனது இப்போது ஒருவழிப்பட்டிருத்தலருமையாதலின் இதற்கு (1) மனோமாத்திர ப்ரணவத்யானம், (2) புருவமத்ய நாட்டம், (3) நாசிகாக்ர த்ருஷ்டி, (4) நாதாநுசந்தானம் ஆகியவை சகாயமாம். இப்படி யொருமைப்பட்ட மனம் ஓரிடமேயிருக்க யோக்கியமானதாகும். இதன்பின் தாரணை செய்யவேண்டும்.
(6) தாரணை:—மனதை தியான யோக்யமானதோர் ஸ்தானத்தி லிருத்துவதாம். ஹ்ருதயமும் ப்ரஹ்மரந்திரமுமே சிரேஷ்டமான தியான யோக்கிய ஸ்தானங்களாம். இவ்விரண்டிடங்களிலுமுள்ள * அஷ்டதள பத்மங்களின் மத்தியில் ஆத்மதேவதாரூப ப்ரஹ்ம சொரூபமே தீபஜ்வாலை போலும் பிரகாசித்துக்கொண்டிருப்பதாகப் பாவித்து மனதை அதில் ஸ்திரமாய் நிறுத்துவதாம். இதன்பின் தியானம் செய்யவேண்டும்.
(7) தியானம்:—முற்கூறிய அத்தேஜோமய சொரூபத்தினும் தான் வேறில்லையென்று ஸோஹம்பாவனையால் தியானிப்பதாம். இதிலும் "எங்குமுள்ள ப்ரஹ்ம சொரூபமே ஆன்மரூபமாய் ஹ்ருதயத்தில் புத்திசாக்ஷியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்" என்னும் சுருதியின்படி அங்ஙனமாயிருக்கும் நானார் என்னும் விசாரத்தால் விசாரிக்கில் ஹ்ருதயகமலத்தில் ஆன்மதேவதை 'அஹம், அஹம்' எனத் தான்றானே ஜ்வலித்துக்கொண்டிருப்பது விளங்கும். இவ்வநுசந்தானரூப தியானமே சிரேஷ்டமாம்.
(8) சமாதி:—மேற்கூறிய தியானத்தின் பரிபாகத்தால் தான் இன்னானென்றும், இன்னது செய்கிறோமென்றும் தோன்றாமல் மனது தியேயத்திலேயே லயித்த அல்லது அஹம், அஹம் என்னும் ஸ்புரிப்பு அடங்கிய (சூக்ஷ்மமான) ஸ்திதியே சமாதி யென்பதாம். இதில் நித்திரை மாத்திரம் வராமல் பாதுகாத்துக்கொண்டு தினந்தோறும் விடாமல் கிரமமாக அநுசந்தித்து வந்தால் ஈச்வரன் கூடிய சீக்கிரத்தில் மனோவிசிராந்திரூப சிரேஷ்டமான கதியை அநுக்ரஹிப்பார்.
28
Keep
பிரத்தியாகாரத்தில் ப்ரணவத்தை மனோமாத்திரமாகத் தியானிக்கச் சொல்லியதின் தாற்பரியமென்ன?
ப்ரணவத்தியானம் செய்யச் சொல்லியதின் தாற்பரிய மிதுவாம்:—ப்ரணவமென்பது அகார, உகார, மகார, அர்த்தமாத்திரை யென்னும் மூன்றரை மாத்திரைகள் கூடிய ஓங்காரமாம். இவற்றில் அகாரமென்பது ஜாக்ர விச்வஜீவ ஸ்தூலதேகங்களென்றும், உகாரமென்பது ஸ்வப்ந தைஜஸஜீவ சூக்ஷ்மதேகங்களென்றும், மகாரமென்பது சுழுப்தி பிராஜ்ஞ ஜீவ காரணதேகங்களென்றும், அர்த்தமாத்திரை யென்பது துரியம் அல்லது ஆன்மசொரூபம் அல்லது அஹம்சொரூப மென்றும், இதற்கப்பாற்பட்ட நிலை துரியாதீதமாகிய ஆனந்தமாத்திர சொரூபமென்றும் சொல்லப்படும். முன் தியானத்திற் கூறிய இந்நான்காவதான அஹம் சொரூபமே மற்ற அகார உகாரமகாரங்களென்னும் மூன்று மாத்திரைகளடங்கியுள்ள அமாத்திரை சொரூபமென்றும், மௌனாக்ஷர மென்றும், அஜபை யென்றும், ஜபியாமல் ஜபித்தலென்றும், பஞ்சாக்ஷராதி சர்வமந்திரங்களின் சாரமான அத்வைத மந்திர மென்றும் கூறப்படும். இவ்வேதார்த்த அர்த்தம் சித்தித்தற்பொருட்டே ப்ரணவத்தியானம் செய்யப்படுவதாம். இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே சமாதி யெனப்பட்டு நிரதிசயானந்த மோக்ஷகதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தானரூபபக்தி யொன்றினாலேயே மோக்ஷமடையவேண்டும் எனக் கூறியிருக்கின்றனர்.
29
Keep
தியானத்தில் தீபஜ்வாலைபோல் ப்ரகாசித்துக்கொண்டிருக்கும் தேஜோமய சொரூபத்தினும் தான் வேறில்லையென்று ஸோஹம்பாவத்துடன் தியானிக்கக்கூறியதின் தாற்பரியமென்ன?
(அ) தேஜோமயத்தினும் தான் வேறில்லையென்று பாவிக்கக் கூறியதன் தாற்பரிய மிதுவாம்:—சுருதிகளில் தியான லக்ஷணத்தைப்பற்றி "கைலாசம், வைகுண்டம், பரமபத மென்பனவாகக் கூறப்படுகிற அஷ்டதளத்தோடுங்கூடிய ஸர்வாத்மகமான ஹ்ருதயகமல மத்தியில் அங்குஷ்டமாத்ர பரிமாணமாய் மின்னலைப்போற் காந்தியுள்ளதாய் தீபஜ்வாலைபோலும் ப்ரகாசிக்கும் அவ்வஸ்துவைத் தியானித்து புருஷன் அமிர்தத்வத்தையடைகிறான்" என்று கூறியிருத்தலால், இதிலிருந்து தான்வேறு அதுவேறு என்ற பேதபாவமும் பின்னத்யானமும் வஸ்துவில் பரிச்சின்னபுத்தியும் ஏகதேசபுத்தியுமாகிய தோஷங்கள் சம்பவியாதிருத்தற் பொருட்டாம்.
(ஆ) ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக் கூறியதன் தாற்பரியமிதுவாம்:—ஸ: + அஹம் - ஸோஹம். ஸ: - பரமாத்மா, அஹம் - நானென விளங்கும் ஆத்மா. பிரமபுரமென்னும் தேகமாகிய பட்டணத்தில் ஹ்ருதயகமலாசனத்தில் வசிக்கும் ஜீவனாகிய சிவலிங்கத்தை, அதாவது தன்னை, தேகாதிகளை நானென்று வெளிமுகத்திற் சஞ்சரிக்கும் அகங்காரரூப மனதை ஹ்ருதயத்திலடக்கி தேகாதிகளிலுள்ள அஹம்பாவம் நீங்கி தேகத்திலிருக்கும் நானார் என்ற விசாரத்தோடும் நிச்சலமாக இருந்தபடியிருந்து விசாரிக்குங்கால் அங்கு அஹம், அஹம் என்று சூக்ஷ்மமாக ஸ்புரித்துக்கொண்டிருக்கும் ஆத்மசொரூபமே எல்லாமா யல்லவுமாய் பாஹ்யாந்தர பேதமின்றி எங்கும் விளங்கும் பரமாத்ம சொரூபமாகலானும், அந்த ப்ரஹ்மமே நானென்பதன் பொருளாய் முற்கூறிய ஜ்வாலாகாரமாக விளங்கலானும் அதை தன்மயமாக பாவித்தலின்றி அன்னியமாக பாவிக்கின் அறியாமை நீங்காதாகலான் அங்ஙனம் பாவிக்கக் கூறியதாம்.
வெகுகாலம் இவ்வாத்மாநுசந்தானமாகிற ஸோஹம் பாவனையால் நிரந்தரம் வஸ்துவை நிச்சலமாய் த்யானித்து வந்தால் ஹ்ருதயத்திலுள்ள அஞ்ஞான அந்தகாரமும், அஞ்ஞானதற்காரியங்களான ஸர்வப்ரதிபந்தங்களும் நீங்கி பரிபூரண ஞானம் லப்தமாகும்.*
இங்ஙனம் தேகமாகிய பட்டணத்தில் ஹ்ருதய குஹையிலிருக்கும் வஸ்துவை யறிதலே, ஸர்வபரிபூரணமாயிருக்கும் ஈச்வரனை அறிதலாம்.
† நவத்வாரங்களுடன் கூடிய தேகமாகிய புரியில் ஞானி சுகமாய் வசிப்பன்.
தேகமே ஆலயம்; ஜீவனே சிவன். அவனை ஸோஹம் பாவனையால் பூஜிக்கின் முக்தியுண்டாகும்.
பஞ்சகோசாத்மகதேகமே குஹை; அதில் வசிக்கும் பரமே குஹேசன் என்று சுருதிகளுங் கூறுகின்றன. ஆத்மாவே ஸர்வதேவாத்மக வஸ்துவாகலான் ஸர்வதியானங்களினும் தானாகிய ஆத்மத்யானமே சர்வசிரேஷ்டமாம். மற்ற த்யானங்களனைத்தும் இதில் அந்தர்ப்பூதமாகலானும், இது சித்தித்தற்பொருட்டே மற்ற த்யானங்கள் சொல்லப்பட்டிருத்தலானும், இது ஸித்தியானால் மற்றவை தேவையில்லை. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும். தியானிக்கும் தன்னை யறியாமல் இதரமாய் தெய்வமிருக்கிற தென்றெண்ணி த்யானிப்பது தனது நிழலைக் காலால் அளத்தற்குச் சமானம் என்றும், *கையிலிருக்கும் அத்யபூர்வமான கௌஸ்துபரத்நத்தைத் தூர எறிந்துவிட்டு மிக அற்பமான சங்குமணி தேடுதேற்குச் சமான மென்றும் பெரியோர் கூறுகின்றனர்.
30
Keep
ஹ்ருதயமும் ப்ரஹ்மரந்திரமுமே தியானயோக்கிய ஸ்தானங்களேனினும் அவசியமாயின் ஆறுதார தரிசனைகளையுங் கொள்ளலாமா?
தியான ஸ்தானங்களாகக் கொள்ளப்படும் ஆறுதார முதலியவனைத்தும் கற்பனைகளேயாம். இவையாவும் ஆரம்ப யோகிகளுக்கே உரியன. ஆறுதார தரிசனைகளைப்பற்றி, "நம்மை சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்கள்செய்யும் அத்வைத பரிபூரண ஞானசொரூப ஆன்மாவாகிற கடவுளே கணபதி, ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்திரன், மஹேச்வரன், சதாசிவனாதிய நாமரூபங்களாக பாவனையா லுண்டாக்கிக்கெடுப்பது மஹாபாவமே" என்று சிவயோகிகளும், "அவையனைத்தும் மனக்கற்பனைகளே" என்று வேதாந்திகளும் கூறுகின்றனர். ஆகவே எல்லாவற்றையும் அறியும் ஞானசொரூபமாகிற தன்னை யறிந்தால் எல்லாமறிந்ததாகும். யாதோன் றிருந்த படியறிய அறியா வெல்லா மறிந்தனவாம் என்று பெரியோருங் கூறியிருக்கின்றனர். நாநாபாவனையோடுங் கூடியுள்ள நாம் கடவுளாகிய ஆன்மாவை பாவித்து வந்தால் அந்த ஏகபாவனையால் அநேக பாவனைகள் நீங்கி முன்னுள்ள ஏகபாவனையும் நசிக்கும். இதுவே தன்னை அல்லது கடவுளை யறிவதாம். இதுவே முக்தி.
31
Keep
ஆன்மாவை பாவிப்ப தெப்படி?
ஆன்மா இருட்டும் ப்ரகாசமுமல்லாத சுயஞ்சோதியாய், தன்மயமாய்த் தனக்குத்தானே ப்ரகாசித்துக்கொண்டிருக்கும் வஸ்துவாகலான் அதை இப்படியென்றும் அப்படியென்றும் பாவித்தல் கூடாது. பாவிக்கும் நினைப்பே பந்தமாக முடியும். மனதை ஆன்மாகாரமாக்குவதே ஆன்மபாவத்தின் தாற்பரியமாம். ஹ்ருதயமென்னும் குகையின் மத்தியில் கேவலப்ரஹ்மமே நான், நான் என்று ப்ரத்தியக்ஷமாய் ஆன்மரூபமாகப் பிரகாசித்துக்கொண்டிருத்தலை அறியாது ஆன்மாவைப் பலவிதங்களாகப் பாவிப்பதினும் அறியாமை வேறுண்டோ?
32
Keep
ஹ்ருதயத்தில் 'நான், நான்' என்று ஆன்மரூபமாக ஸ்புரித்துக்கொண்டிருக்கிறது என்ற ப்ரஹ்மநிலையை எளிதிற் போதமாகுமாறு இன்னும் சற்று விளக்கமாக விஸ்தரித்துக் கூறுதல் கூடுமோ?
சுழுத்தி மூர்ச்சையாதிய காலங்களில் எவ்வித ஞானமும் அதாவது தன்ஞானமோ அன்னியஞானமோ அற்பமு மின்றென்பது எவர்க்கு மநுபவ மன்றோ? பின்னர் தூக்கத்தினின்றும் 'விழித்தேன்,' மயக்கத்தினின்றுங் 'தெளிந்தேன்' என்ற அநுபவம் முற்கூறிய நிர்விசேஷநிலையினின் றுதித்ததோர் விசேஷஞானத்தினது தோற்றமன்றோ? இவ்விசேஷஞானமே விஞ்ஞானமெனப்படுகிறது. இவ்விஞ்ஞானமானது ஆன்மாவையேனும் அநான்மாவையேனும் ஆச்ரயித்தே விளங்குமல்லாது தனியாகப் பிரகாசிக்காது. இது ஆன்மாவை யாச்ரயிக்கும்போது மெய்ஞ்ஞானம், ஆன்மாகார மனோவிருத்தி ஞானம், அகண்டாகாரஞானமென்றும், அநான்மாவை யாச்ரயிக்கும்போது அஞ்ஞானமென்றும் சொல்லப்படுகிறது. இவ்விஞ்ஞானம் ஆன்மாவை யாச்ரயித்து ஆன்மாகாரமாக விளங்கும் ஸ்திதியே அஹம் ஸ்புரிப்பு எனச் சொல்லப்படுகிறது. இந்த ஸ்புரிப்பு வஸ்துவை விட்டுத் தனியாக இராது. இந்த ஸ்புரிப்பே வஸ்துவை அபரோக்ஷப்படுத்தற்கான தக்க குறியாம். என்றாலும் இதுவே வஸ்து நிலையாகாது. இந்த ஸ்புரிப்பானது எதனை ஆச்ரயித்து விளங்குகிறதோ அந்த மூலமே வஸ்து அல்லது ப்ரஜ்ஞானமெனப்படும். வேதாந்தம் ப்ரஜ்ஞானம் ப்ரஹ்மம் என்றது இதுபற்றியேயாம்.
இதனை:—
*நிகழ்சயஞ் சோதி யாகி நிகிலசாட் சியுமா மான்மா
புகலும்விஞ் ஞான கோசம் பொருந்தியே விளங்கு மென்றும்
இகழ்விலா விவ்வான் மாவை யிலக்கிய மாகப் பற்றி
அகமென வனுப விப்பா யகண்டமாம் விருத்தி யாலே
என்னும் சுருதியின் தாற்பரியத்தானுந் தெளிக.
33
Keep
ஆந்தரபூஜை அல்லது நிர்க்குணபூஜை யென்பதென்ன?
நிர்க்குண பூஜையைப்பற்றி ரிபுகீதை முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் சர்வ யஜ்ஞு, தான, தப, வ்ரத, ஜப, யோக, பூஜைகளும் அஹம்ப்ரஹ்மம் என்னும் த்யானமேயாகலான் சர்வப்ரகாரத்தாலும் அஹம் ப்ரஹ்ம பாவனையை எப்போதும் விடாதிருக்கவேண்டுமென்பதே நிர்க்குண பூஜையின் தாற்பரியம்.
34
Keep
ஞானாஷ்டாங்கங்க ளெவை?
இயம நியமாதிகளாகிய முற்கூறிய அவ்வெட்டுமாம். இவற்றில்:—
1. இயமம்:—தேகாதி ப்ரபஞ்ச விஷயங்களிலுள்ள தோஷங்களைத் தெரிந்து இந்திரிய சமூகங்களை அடக்குதல்.
2. நியமம்:—சஜாதீய விருத்தியின் ப்ரவாகமும் விஜாதீய விருத்தியின் திரஸ்காரமுமாம். அதாவது பரமாத்மாவின்கண் இடையறா துண்டாகும் அன்பு.
3. ஆசனம்:—எதனிடத்து இடைவிடாத ப்ரஹ்ம சிந்தனம் சுகமாக வுண்டாகுமோ அஃதாசனம்.
4. ப்ராணாயாமம்:—தேகாதி பிரபஞ்ச விஷயங்களின் நாமரூப மென்ற அசத்தான இரண்டம்சங்களையும் நீக்குதல் இரேசகமும், அவைகளில் அநுசூதமாயிருக்கும் ஸத், சித், ஆனந்த மென்ற சத்தான மூன்றம்சங்களையும் கிரகித்தல் பூரகமும், அங்ஙனம் கிரகித்த அம்சங்களை உள்ளிருத்தல் கும்பகமுமாம்.
5. ப்ரத்தியாகாரம்:—முன் நீக்கிய நாமரூபங்கள் மனதிற் கலவாது காத்தல்.
6. தாரணை:—அஸ்தி, பாதி, ப்ரியரூபமே தானாகிய ஆத்மசொரூப மென்று மனதை வெளிநாடாது ஹ்ருதயத்தில் நிறுத்தல்.
7. தியானம்:—'சிந்மாத்ரவடிவேநான்' என்று சிந்தித்திருத்தல், அதாவது முற்கூறியபடி பஞ்சகோசாத்மகமான சரீரத்தை நானல்ல வென்று அப்படியே யிருத்தி நானாரென்று விசாரிக்க, அங்கு தான்றானாய் ஸ்புரித்துக் கொண்டிருக்கும் அகம் சொரூபமாய் இடையறாதிருத்தல்.
8. சமாதி:—முற்கூறிய அஹம் ஸ்புரிப்பும் அடங்கிய (சூக்ஷ்மமான) சாக்ஷாத்கார நிலையாம்.
இவ்வித ப்ராணாயாமாதிகளுக்கு, முன் யோகப்பிரிவிற் கூறிய ஆசனாதி நியமங்கள் வேண்டுவதின்று. எங்கிருந்தாலும் எப்போதும் செய்யலாம். யோகம், ஞானம் ஆகிய இவ்விரண்டில் தனக்குப் பிரியமாகத் தோற்றுவதையாவது அல்லது இரண்டையுமேயாவது சமயோசிதமா யனுஷ்டிக்கலாம். மறதியே சர்வ அநர்த்தங்களுக்கும் மூலமென்றும் *முமுக்ஷுக்களுக்குக் காலனென்றும் பெரியோர் கூறுவதால், எவ்விதத்திலேனும் ஆன்மசொரூபமாகிற தன்னிடத்தில் மனதை நிறுத்தி எப்போதும் தன்னை மறவாதிருக்கவேண்டுமென்பதே முக்கிய தாற்பரியம். மனமொன் றடங்கினால் எல்லாங் கைவந்ததாகும். இந்த யோகஞான அஷ்டாங்கப் பிரிவுகளும் அவற்றின் விவரங்களும் சாஸ்திரங்களில் விஸ்தாரமாகக் கூறப்பட்டிருத்தலால் இங்கு வேண்டிய அளவு சுருக்கிக் கூறப்பட்டது.
35
Keep
யோகாங்கத்தின் ப்ராணாயாமத்தையும் ஞானாங்கத்தின் ப்ராணாயாமத்தையும் ஏககாலத்தில் அநுஷ்டித்தல் கூடுமோ?
எதுகால பரியந்தம் மனதானது கேவலகும்பகத்தாலோ விசாரத்தாலோ ஹ்ருதயத்தில் அடங்கவில்லையோ அதுகால பரியந்தம் இரேசக பூரகாதிகள் அவசியமாகலான் முன்னதை அப்பியாசகாலத்திலும் பின்னதை எப்போதுமாக இரண்டையுமே அநுஷ்டித்து வரலாம். ப்ராணாயாமம் கேவலகும்பகம் சித்திக்கிறவரையில் செய்தால் போதும்.
36
Keep
சாதகர்கள் சந்தேகத்திற் கிடனாக மோக்ஷமார்க்கம் இப்படிப் பலவிதங்களாகக் கூறப்படுவெதேன்?
அதிகாரிகளின்பரிபாக நிலைக்குத் தக்கபடி வேதங்களில் அநேக மார்க்கங்கள் கூறப்பட்டிருந்தாலும் மனோநாசமே மோக்ஷமாகலான் சர்வமுயற்சிகளின் தாற்பரியமும் மனதை அடக்குவதிலேயேயாம். தியானமார்க்கங்கள் பேதமாகத் தோன்றினும் முடிவில் ஒன்றாகவே முடியும். அதைப்பற்றிச் சங்கிக்கத் தேவையில்லை. மனப்பரிபாகத்துக்குத் தக்க மார்க்கத்தை அநுஷ்டிக்கலாம்.
ப்ராணபந்தனம் அல்லது யோகம், மனோபந்தனம் அல்லது * ஞானம் ஆகிய இவ்விரண்டும் மனோநாசத்திற்குரிய முக்கிய சாதனங்கள். அவரவர் கர்மாநுசாரம் இரண்டிலொன்று சுகமாய்த் தோன்றும். என்றாலும், முரட்டு மாட்டுக்குப் புல்லைக்காட்டித் தடவிக்கொடுத்து வசப்படுத்திக் கட்டுவதுபோல் ஞானமும், அடித்துக் கட்டுவதுபோல யோகமு மென்றே அறிஞர் கூறுவர். முக்கிய அதிகாரிகள் வேதாந்த விசாரத்தால் வஸ்து நிர்ணயந்தெரிந்து தன்னையும் சகலத்தையும் வஸ்துமயமாகப் பார்த்தலானும், மத்திம அதிகாரிகள் கேவலகும்பகத்தோடு மனதை ஹ்ருதயத்தில் நிறுத்தி நெடுநாள் வஸ்துவை தியானிப்பதாலும், மந்த அதிகாரிகள் ப்ராணாயாம மாதியவற்றால் கிரமமாக அந்நிலையை அடைவதாலும் மனதை ஆன்மாவில் ஸ்திரப்படுத்திக் கதி பெறுவார்கள்.
ஹ்ருதயத்திலுள்ள அஞ்ஞானரூப மனதாகிய நானென்னும் சங்கற்பம் நசிக்கிறவரையில் மனதானது ஹ்ருதயத்தில் தடுக்கப்படவேண்டும். இதுவே ஞானம்; இதுவே தியானமும். மற்றவையெல்லாம் வாக்கு விஸ்தாரமும் சாஸ்திர விஸ்தாரமுந்தான் என்று சுருதிகள் கூறுவதால் எப்படியேனும் மனதை தன்னிடத்திலேயே நிறுத்துந்தீரம் பெற்றுவிட்டால் மற்ற விஷயங்களைப்பற்றிக் கவலையேயில்லை.
*யோகிகளைக் காட்டிலும் பக்தனே சிரேஷ்டன் என்றும், †மோக்ஷகாரண ஸாமக்கிரியானது ஸ்வஸ்வரூபமான ஆத்மாநுசந்தானரூப பக்தியே என்றும் பெரியோருங் கூறியிருக்கின்றனர்.
இங்ஙனம் ப்ரஹ்மத்தை அறியும் மார்க்கமே தகரோபாசனை, தகரவித்தை, ப்ரஹ்மவித்தை, ஆன்மவித்தையாதிய மற்றும் பலவிதங்களாகவும் சொல்லப்படுவதாம். இதைக்காட்டிலும் வேறென்ன சொல்லக்கூடும். ஊஹித்தறிந்துகொள்ளவேண்டும்.
சாஸ்திரங்கள் அநேகவிதங்களாகச் சொல்லும். அவற்றையெல்லாம் ஆராய்ந்தே சுருக்கமானதும் உண்மையானதுமான மார்க்கத்தைப் பெரியோர் இப்படிக் கூறுகின்றனர்.
37
Keep
மேற்கூறியுள்ள அநுஷ்டானங்களினால் ஒருவாறு மனதிலுள்ள அஞ்ஞான, சந்தேக, விபரீதமாதிய சர்வ ப்ரதிபந்தங்களும் நசிக்கப்பெற்று சித்தோபசாந்தம் வாய்க்கப்பெற்றாலும் ஓர் சந்தேக மாத்திரமுளது. அதாவது மனதை ஹ்ருதயத்தில் இருத்திவிட்ட பிறகு அறிவோன்று தான் பூர்ணமாகப் பிரகாசிக்கிறது. இங்ஙனம் மனமானது ஆன்மாகார மடைந்துவிட்ட பிறகு விசாரிக்கிறவன் யார்? தன்னைத்தானே பூஜிப்பதாக முடிவதால் இது ஆட்டைத் தோளில் போட்டுக்கொண்டு 'ஆடெங்கே, ஆடெங்கே' என்று தேடிய இடையன் கதையாகவன்றோ முடிகிறது?
ஜீவனே சிவன்; சிவனே ஜீவன். அந்த ஜீவன் சிவனேதான். உமியால் கட்டுப்பட்டிருக்கிற வரையில் நெல்லாயிருக்கிறது; உமி நீங்கினால் அரிசியாகிறது. அதைப்போல கர்மபாசத்தினால் கட்டுண்டிருக்கிற வரையில் ஜீவனாயிருக்கிறான்; அஞ்ஞான பாசம் நீங்கினால் சிவனாகிய தேவனாகிப் பிரகாசிக்கிறான் என்ற சுருதியின்படி மனோரூப ஜீவன் தான் கேவலம் ஆத்மசொரூபமாகவே யிருப்பதை மறந்த மறப்பினாலேயே ஜீவனென்னும் நாமத்தோடு மனோரூபமாய் பந்தப்பட்டிருத்தலால், எப்போதும் தானாகவே யிருக்கும் ஆத்மாவைத் தேடுவது இடையன் கதையாகவே யிருந்தாலும், தன்னை மறந்த ஜீவன் தன்னை ஆத்மாவென் றோர்கா லறிந்ததுகொண்டே ஆத்மாவாகிய தெய்வமாய் விடுவானா? பூர்வ ஜன்மாந்தரவாசனா ப்ரதிபந்தத்தால் அடிக்கடி தான் ஆத்மாவா யிருப்பதை மறந்து தேகாதிகள் நானென்று பிரமிப்பனன்றோ? ஒருவன் ஒரு பெரிய உத்தியோகஸ்தனைப் பார்த்ததுகொண்டே தானும் அவ்வுத்தியோகஸ்த னாய்விடுவானா? கிரமமாக அதற்கான முயற்சி செய்தாலன்றோ அவ்வுத்தியோகஸ்தனாதல் கூடும்? அங்ஙனமே தேகாதிகளை நானென்னும் மனோரூபமாகப் பந்தப்பட்டிருக்கும் ஜீவனும் கிரமப்படி ஆத்மாநுசந்தானமென்ற முயற்சியைச் செய்து மனோநாசம் வாய்க்கப்பெற்றாலன்றோ ஆன்மாவாதல் கூடும். *
தேகாதிகள் நானென்ற இந்த நெடுங்கால வாசனையானது 'தேகாதிகள் நானல்ல. ஆன்மாவே நான்' (சிவோகம், சிவோகம்) என்ற நெடுங்கால அநுசந்தானத்தாலேயே நசிக்கப்பெற்று மனோபசமனரூப பரமசீதள சிவநிலையை அடைதல்கூடு மாகலான் மனமென்னும் அகங்காரரூப ஜீவனானவன் சர்வதேவாத்மகமாய்த் தானாயிருக்கும் ஆத்மதேவதையே தான் என்று பலகாலம் தன்னைத் தானே பூஜித்து வாசனைகளே ரூபமாகக் கொண்டிருக்கிற மனமென்னும் பாசத்தை வென்று ஆன்ம சாக்ஷாத்காரமென்னும் பரம கைவல்யத்தைப் பெறுதல் வேண்டும்.
இங்ஙனம் இடைவிடாது செய்யப்படும் இவ்வாத்மாநுசந்தானம் மனோநாசம் செய்து முடிவில் பிணஞ்சுடு தடி போலத் தானும் நீங்கிவிடும்; இதுவே மோக்ஷமாம்.
38
Keep
ஜீவன் சுபாவத்தில் ஆன்மாவாகவே யிருந்தும் அங்ஙனமாய தனது சுபாவ நிலையினை அறியவொட்டாமல் மறைப்பதேது?
தனது ஸ்வபாவ ஸ்திதியினை மறந்த மறதியே வடிவான ஆவரணசக்தியாம்.
39
Keep
ஜீவன் தன்னை மறந்ததுண்டானால் எல்லோருக்கும் நான் என்ற அநுபவந் தோன்றுதற் கேது வென்னை?
* ஆவரணம் ஜீவனை முற்றும் மறைத்துவிடுவதில்லை; நான் ஆன்மாவென்ற ஸ்வபாவத்தை மாத்திரம் மறைத்து தேகம் எனத் தோற்றுவிக்கிறதே யன்றி சத்தாகவும் நித்தியமாகவுமுள்ள 'நான்' என்ற தனது இருப்பையே தனக்குத் தெரியவொட்டாமல் மறைப்பதில்லை.
40
Keep
ஜீவன்முக்த, விதேகமுக்தர்களின் இலக்கணங்க ளெவை?
தேகம் நான்ல்ல; ஆன்மசொரூபமாக விளங்கும் ப்ரஹ்மமே நான். † பரிபூரண சொரூபியான என்னில் தேகாதி ப்ரபஞ்சங்கள் யாவும் ஆகாயநீலம்போன்று வெறுந் தோற்றமாத்திரமேயாம் என்னும் திடநிச்சயமுள்ளவனே ஜீவன்முக்தனானாலும் மனலய மில்லாதவரையில் ப்ராரப்தவசத்தால் தோற்றும் த்ருஷ்ட விஷயங்களில் ஏகதேசம் துக்கம் தோன்றவுங் கூடும். மனச்சலனம் நீங்காமையால் ஆநந்தாநுபவமிருக்காது. நெடுங்கால த்யானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலமுமான மனத்திற்கே ஆத்மாநுபவம் கூடும். இவ்விதம் சூக்ஷ்மமனதோடு சொரூபாநுபவமு முள்ளவனே ஜீவன்முக்த னெனப்படுகிறான். இந்த ஜீவன்முக்தி ஸ்திதியே நிர்க்குணப்ரஹ்மமென்றும் துரியமென்றும் சொல்லப்படுகிறது. இந்த சூக்ஷ்மமனதும் லயித்து சொரூபாநுபவமுமின்றி ஆநந்தக்கடலில் மூழ்கி ஒன்றுந் தோற்றாமல் அம்மயமாக விருப்பவனே விதேகமுக்தனெனப்படுகிறான். இவ்விதேகமுக்தி ஸ்திதியே நிர்க்குணாதீதப்ரஹ்மமென்றும் துரியாதீதமென்றும் சொல்லப்படுகிறது. இதுவே முடிவு. துக்கசுகதாரதம்மிய பேதத்தால் பிரமவித்து, வரன், வரீயான், வரிஷ்டன் என நான்கு வகையாகக் கூறும் ஜீவன்முக்த, விதேகமுக்த பேதங்கள் பார்க்கும் பரதிருஷ்டியைப் பற்றியனவன்றி ஞானமுக்தி பேத முண்மையிலில்லை.