Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Caccitāṉantacivam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
பாராதிககனப் பரப்புமுண்டோவென்று
படர்வெளியதாகியெழுநாப்
பரிதிமதிகாணாச் சுயஞ்சோதியாயண்ட
பகிரண்டவுயிரெவைக்கும்
நேராகவறிவா யகண்டமாயேகமாய்
நித்தமாய்நிர்த்தொந்தமாய்
நிர்க்குணவிலாசமாய் வாக்குமனமணுகாத
நிர்மலானந்தமயமாய்ப்
பேராதுநிற்றிநி சும்மாவிருந்துதான்
பேரின்பமெய்திடாமற்
பேய்மனதையண்டியே தாயிலாப்பிள்ளைபோற்
பித்தாகவோமனதைநான்
சாராதபடியறிவி னிருவிகற்பாங்கமாஞ்
சாசுவதநிட்டையருளாய்
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
2
Keep
குடக்கொடுகுணக்காதி திக்கினையுழக்கூடு
கொள்ளல்போலைந்துபூதங்
கூடுஞ்சுருங்கிலைச் சாலேகமொன்பது
குலாவுநடைமனையைநாறும்
வடக்கயிறுவெண்ணரம் பரவென்புதசையினான்
மதவேள்விழாநடத்த
வைக்கின்றகைத்தேரை வெண்ணீர்செநீர்கணீர்
மலநீர்புணீரிறைக்கும்
விடக்குத்துருத்தியைக் கருமருந்துக்கூட்டை
வெட்டவெட்டத்தளிர்க்கும்
வேட்கைமரமுறுகின்ற சுடுகாட்டைமுடிவிலே
மெய்போலிருந்துபொய்யாஞ்
சடக்கைச்சடக்கெனச் சதமென்றுசின்மயந்
தானாகிநிற்பதென்றோ
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
3
Keep
பாகத்தினாற்கவிதை பாடிப்படிக்கவோ
பத்திநெறியில்லைவேத
பாராயணப்பனுவன் மூவர்செய்பனுவலது
பகரவோவிசையுமில்லை
யோகத்திலேசிறிது முயலவென்றாற்றேக
மொவ்வாதிவூண்வெறுத்தா
லுயிர்வெறுத்திடலொக்கு மல்லாதுகிரியைக
ளுபாயத்தினாற்செய்யவோ
மோகத்திலேசிறிது மொழியவிலைமெய்ஞ்ஞான
மோனத்தினிற்கவென்றான்
முற்றாதுபரிபாக சத்திகளேகநின்
மூதறிவிலேயெழுந்த
தாகத்திலேவாய்க்கு மமிர்தப்ரவாகமே
தன்னந்தனிப்பெருமையே
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
4
Keep
இமையளவுபோதையொரு கற்பகாலம்பண்ணு
மிவ்வுலகமெவ்வுலகமோ
வென்றெண்ணம்வருவிக்கு மாதர்சிற்றின்பமோ
வென்னின்மகமேருவாக்கிச்
சுமையெடுமினென்றுதான் சும்மாடுமாயெமைச்
சுமையாளுமாக்கிநாளுந்
துர்ப்புத்திபண்ணியுள நற்புத்தியாவையுஞ்
சூறையிட்டிந்த்ரஜால
மமையவொருகூத்துஞ் சமைந்தாடுமனமாயை
யம்மம்மவெல்லலெளிதோ
வருள்பெற்றபேர்க்கெலா மொளிபெற்றுநிற்குமீ
தருளோவலாதுமருளோ
சமயநெறிகாணாத சாக்ஷிநீசூக்ஷமமாத்
தமியனேற்குளவுபுகலாய்
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
5
Keep
இனியேதெமக்குனருள் வருமோவெனக்கருதி
யேங்குதேநெஞ்சமையோ
வின்றைக்கிருந்தாரை நாளைக்கிருப்பரென்
றெண்ணவோதிடமில்லையே
யனியாயமாயிந்த வுடலைநானென்றுவரு
மந்தகற்காளாகவோ
வாடித்திரிந்துநான் கற்றதுங்கேட்டது
மவலமாய்ப்போதனன்றோ
கனியேனும்வறியசெங் காயேனுமுதிர்சருகு
கந்தமூலங்களேனுங்
கனல்வாதைவந்தெய்தி னள்ளிப்புசித்துநான்
கண்மூடிமௌனியாகித்
தனியேயிருப்பதற் கெண்ணினேனெண்ணமிது
சாமிநீயறியாததோ
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
6
Keep
மத்தமதகரிமுகிற் குலமென்னநின்றிலகு
வாயிலுடன்மதியகடுதோய்
மாடகூடச்சிகர மொய்த்தசந்திரகாந்த
மணிமேடையுச்சிமீது
முத்தமிழ்முழக்கமுடன் முத்தநகையார்களொடு
முத்துமுத்தாய்க்குலாவி
மோகத்திருந்துமென் யோகத்தினிலைநின்று
மூச்சைப்பிடித்தடைத்துக்
கைத்தலநகப்படை விரித்தபுலிசிங்கமொடு
கரடிநுழைநூழைகொண்ட
கானமலையுச்சியிற் குகையூடிருந்துமென்
கரதலாமலகமென்னச்
சத்தமறமோனநிலை பெற்றவர்களுய்வர்காண்
சனகாதிதுணிவிதன்றோ
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
7
Keep
கைத்தலம்விளங்குமொரு நெல்லியங்கனியெனக்
கண்டவேதாகமத்தின்
காட்சிபுருஷார்த்தமதின் மாட்சிபெறுமுத்தியது
கருதினனுமானமாதி
யுத்திபலவாநிரு விகற்பமேலில்லையா
லொன்றோடிரண்டென்னவோ
வுரையுமிலைநீயுமிலை நானுமிலையென்பது
முபாயநீயுண்டுநானுஞ்
சித்தமுளனானில்லை யெனும்வசனநீயறிவை
தெரியார்கடெரியவசமோ
செப்புகேவலநீதி யொப்புவமையல்லவே
சின்முத்திராக்கமரபிற்
சத்தமறவெனையாண்ட குருமௌனிகையினாற்
றமியனேற்குதவுபொருளே
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
8
Keep
காயாதமரமீது கல்லேறுசெல்லுமோ
கடவுணீயாங்களடியேங்
கர்மபந்தத்தினாற் சன்மபந்தம்பெறக்
கற்பித்ததுன்னதருளே
வாயாரவுண்டபேர் வாழ்த்துவதுநொந்தபேர்
வைவதுமெங்களுலக
வாய்பாடுநிற்கநின் வைதிகவொழுங்குநினை
வாழ்த்தினாற்பெறுபேறுதா
னோயாதுபெறுவரென முறையிட்டதாற்பின்ன
ருளறுவதுகருமமன்றா
முபயநெறியீதென்னி னுசிதநெறியெந்தநெறி
யுலகிலேபிழைபொறுக்குந்
தாயானகருணையு முனக்குண்டெனக்கினிச்
சஞ்சலங்கெடவருள்செய்வாய்
சாவபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
9
Keep
இன்னம்பிறப்பதற் கிடமென்னினிவ்வுடல
மிறவாதிருப்பமூலத்
தெழுமங்கியமிர்தொழுகு மதிமண்டலத்திலுற
வென்னம்மைகுண்டலினிபாற்
பின்னம்பிறக்காது சேயெனவளர்த்திடப்
பேயேனைநல்கவேண்டும்
பிறவாதநெறியெனக் குண்டென்னினிம்மையே
பேசுகர்ப்பூரதீபம்
மின்னும்படிக்ககண் டாகாரவன்னைபால்
வினையேனையொப்புவித்து
வீட்டுநெறிகூட்டிடுதன் மிகவுநன்றிவையன்றி
விவகாரமுண்டென்னிலோ
தன்னந்தனிச்சிறிய னாற்றிலேன்போற்றிவளர்
சன்மார்க்கமுத்திமுதலே
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
10
Keep
வேதாவையிவ்வணம் விதித்ததேதென்னினுன்
வினைப்பகுதியென்பனந்த
வினைபேசவறியாது நிற்கவிவைமனதால்
விளைந்ததான்மனதைநாடிற்
போதமேநிற்குமப் போதத்தைநாடிலோ
போதமுநினால்விளக்கம்
பொய்யென்றுதெய்வமறை யாவுமேநீயென்று
போக்குவரவறநிகழ்த்து
மாதாரவாதேய முழுதுநீயாதலா
லகிலமீதென்னையாட்டி
யாடல்கண்டவனுநீ யாடுகின்றவனுநீ
யருளுநீமௌனஞான
தாதாவுநீபெற்ற தாய்தந்தைதாமுநீ
தமருநீயாவுநீகாண்
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
11
Keep
கொந்தவிழ்மலர்ச்சோலை நன்னீழல்வைகினுங்
குளிர்திம்புனற்கையள்ளிக்
கொள்ளுகினுமந்நீ ரிடைத்திளைத்தாடினுங்
குளிர்சந்தவாடைமடவார்
வந்துலவுகின்றதென மூன்றிலிடையுலவவே
வசதிபெறுபோதும்வெள்ளை
வட்டமதிபட்டப் பகற்போலநிலவுதர
மகிழ்போதும் வேலையமுதம்
விந்தைபெறவறுசுவையில்வந்ததெனவமுதுண்ணும்
வேளையிலுமாலைகந்தம்
வெள்ளிலையடைக்காய் விரும்பிவேண்டியவண்ணம்
விளையாடிவிழிதுயிலினுஞ்
சந்ததமுநின்னருளை மறவாவரந்தந்து
தமியேனைரக்ஷைபுரிவாய்
சர்வபரிபூரண வகண்டதத்துவமான
சச்சிதானந்தசிவமே.
Previous
←
Eṅkuniṟaikiṉṟaporuḷ
Next
Tēcōmayāṉantam
→